புதுடெல்லி: பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசானில் உலகம் முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறனர். சர்வதேச பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் போன்ற காரணங்களால், இந்த நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்ட அறிவிப்பில், தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. மேலும் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையானது, இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜெஸ்ஸி வெளியிட்ட அறிவிப்பில், ‘அமேசான் நிறுவனம் 18,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டதால், தற்போது ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிநீக்கமானது, கடந்த நவம்பரில் அறிவித்ததை விட அதிகம்’ என்று தெரிவித்துள்ளார்.