நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி, உணவுப் பாதுகாப்பை உருவாக்கி பாராளுமன்ற ஜனநாயகத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – புதிய ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வில் அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தின் சார்பில் அனைத்துக் கட்சிகளிடம் அழைப்பு விடுத்த பிரதமர்
உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து ஏனைய சகல துறைகளினதும் முன்னேற்றத்துக்காக செயற்பட அனைவரும் ஒன்றிணையுமாறு பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம் சார்பில் சகல கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்தார். மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு உத்திகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளான இன்று (05) பாராளுமன்றத்தில் சபாநாயகர் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுதந்திரமடைந்து 75வது வருடத்தைக் கொண்டாடவிருக்கும் சூழ்நிலையில் சர்வஜன வாக்குரிமையை 91 வருடங்களாக அனுபவிக்கும் இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகத்தைத் தொடர்ந்தும் முன்னோக்கிக் கொண்டுசெல்ல பாராளுமன்றத்தில் உள்ள சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்பை நாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பொருளாதார, சமூக, சட்ட மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, விமர்சனங்களுக்கு இடமளித்து ஜனநாயகத்தை பலப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, வாழ்க்கைச் செலவு தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும் இந்த வருடத்தை சவால்களை வெற்றிகொண்ட வருடமாக மாற்றுவதற்கு பாராளுமன்றம் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
கடந்த காலத்தில் பிரதான கோரிக்கையாக இருந்த பாராளுமன்றக் குழு முறையை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், 21வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம் இதற்கு அமைய முன்னோக்கிச் செல்ல நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், பாராளுமன்றத்தில் சர்வகட்சிகளின் இணக்கப்பாட்டுடன் தேசிய பேரவையின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல சகல தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கௌரவ பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்,
“கௌரவ சபாநாயகர் அவர்களே, முதலில் 2023 வருடத்தில் நாம் கூடியுள்ள முதலாவது சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் சார்பில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் சகல கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றேன். அத்துடன், பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு அமைய எதிர்வரும் வருடங்கள் நாம் இந்த சாவல்களை வெற்றிகொள்ளும் வருடங்களாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட அரசாங்கம் என்ற ரீதியிலும், பாராளுமன்றம் என்ற ரீதியிலும் ஒற்றுமையாக செயற்படுவதற்கான வாய்ப்புக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறான சூழ்நிலையில் நாம் உங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் மாத்திரம் நின்று விடாது, பல சவால்களை எதிர்கொண்டு ஒரு சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப உறுதிபூணுவோம். குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து ஏனைய சகல துறைகளினதும் முன்னேற்றத்துக்காக செயற்பட அனைவரும் தீவிரமாகச் செயற்படுவோம். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான உத்திகள் தயாரிக்கப்படுவதுடன், புத்தாண்டில் மகத்தான தேசமாக எழுச்சிபெற நாட்டுமக்களின் நம்பிக்கையுடன் கைகோர்த்து செயற்படுமாறு அரசாங்கத்தின் சார்பில் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அதேநேரம், எமது நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு மாத காலமே உள்ளது. இலங்கையின் ஜனநாயகப் பாராளுமன்ற முறைமையைப் பாதுகாத்து சர்வஜன வாக்குரிமையானது மக்களால் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் அரசாங்கங்களை தெரிவு செய்யவும், அரசாங்கங்களின் வழியைத் தீர்மானிக்கும் நடவடிக்கை என்பதுடன், 91 வருடங்களாக அனுபவித்துவரும் உலகின் சர்வஜன வாக்குரிமையை மேலும் பலப்படுத்த சகல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதை 75து சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கும் இத்தருணத்தில் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
பிரதி சபாநாயகர் அவர்களே, கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் அரசாங்கம் பொருளாதார ரீதியில், சமூக ரீதியாக சீர்குலைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முன்னெடுத்துள்ள பல நடவடிக்கைகள் முன்னேற்றம் கண்டுள்ளன என்பதை விசேடமாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இதன் ஊடாக மக்களினதும், சர்வதேசத்தினதும் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
விமர்சனங்களுக்கு இடமளித்து, விமர்சனங்களை ஆராய்ந்து ஜனநாயக சமூகம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. விசேடமாக பொருளாதார சிக்கல்கள் காணப்பட்ட ஜூலை மாதத்தில் காணப்பட்ட நிலைமைகள் மாற்றப்பட்டு இன்று மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு விரிவான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற நம்பிக்கை நாடு முழுவதிலும் காணப்படுகிறது.
வாழ்க்கைச் செலவுப் பிரச்சனைகள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள சுமை போன்ற சவால்களிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் ஒன்றாகப் பிரச்சினைகளைக் கடந்து அனைவருக்கும் தீர்வுகளைக் காணும் என்ற நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.
மேலும், சபாநாயகர் அவர்களே, அந்தக் காலகட்டத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகக் காணப்பட்ட பாராளுமன்றத்தில் குழு முறையை உருவாக்கி புதிய பாதையில் செல்ல வேண்டும் என்பதாக இருந்தது. இந்த நிலையில் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட குழு அமைப்பை அதிகபட்சமாக பயனுள்ளதாக மாற்றுவதற்கு 2023ஆம் ஆண்டில் பாராளுமன்றம் செயற்படும் என நாம் நம்புகிறோம். சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டுள்ள குழுக்களின் செயற்பாடுகள் சுறுசுறுப்பாக தொடர பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
அத்துடன், கடந்த காலத்தில் பெரிதும் சர்ச்சைக்கு உள்ளான 21வது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருப்பதுடன், 21வது அரசியலமைப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளை உருவாக்குவது தொடர்பாக, அரசியலமைப்பின்படி செயற்படுவதற்கு அனைத்துக் கட்சிகளும் இணக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் இணைந்து செயற்பட வேண்டும் என மீண்டும் ஒருமுறை பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.
இது மாத்திரமன்றி பாராளுமன்றத்தில் சகல கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட தேசிய பேரவை, சகல கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்தையும் உள்ளடக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய பேரவையாக செயற்படுத்த அரச மற்றும் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பு கௌரவ சபாநாயகரின் அக்கிராசனத்தினால் உருவாக்கப்பட்ட தேசிய பேரவையின் செயற்பாடாக முன்கொண்டு செல்வதற்கு பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுப்பது முக்கியம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம். நமது நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக, நாட்டின் பொருளாதாரத்தை வலிமையான ஒன்றாக மாற்றுவதற்கு சர்வதேச அளவில் நடைபெற்ற விவாதங்கள், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் நமக்கு ஆதரவான குழுக்களுடன், பல நாடுகள் குறிப்பாக இந்தியா, மற்றும் மக்கள் சீனா வெற்றிகரமான முடிவுகளை கொண்டு வந்துள்ளது. சாத்தியமான நடவடிக்கைக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
இதனை விரைவில் வெற்றிபெறச் செய்ய சகல தரப்பினரினதும் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்ப்பதுடன், நாட்டின் சகல குடிமக்களினதும் சிங்கள, தமிழ், முஸ்லிம் சகல குடிமக்களின் இணக்கப்பாட்டுடன் எமது நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் கௌரவம் மிக்க சவாலை முறியடிக்கும் பணயத்திற்காக நாம் செயற்படுவோம். எமது நாட்டில் இதுவரை இந்த சவால்களுக்குத் தோள்கொடுத்து இந்த சவால்களின் ஊடாகப் பயணிக்க அர்ப்பணிப்புடன் உள்ள விவசாயிகள், மீனவர்கள் அத்துடன் எமது உள்நாட்டு வர்த்தக சமூகத்தினர் முகங்கொடுத்துள்ள சிரமங்களுக்கு மத்தியில் உள்நாட்டு வர்த்தக சமூகத்தின் ஒத்துழைப்புடன் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார உற்பத்தி, சர்வதேச ரீதியில் ஏற்றுமதியை வெற்றிகொள்ளக் கூடிய பொருளாதார, நிதி, அந்நியச் செலாவணியைப் பெற நாம் ஒன்றிணைவோம்.
நாங்கள் பாராளுமன்றத்தில் உறுதியளித்தபடி, 2023 ஆம் ஆண்டில் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு சட்டத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான கால அட்டவணையின்படி மிகத் தெளிவான நடவடிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைப்போம். இதேவேளை, ஜனாதிபதி அவர்கள் இச்சந்தர்ப்பத்தில் விடுத்துள்ள அறிக்கைக்கு மேலதிகமாக, முன்னாள் பாப்பரசர் 16ம் பெனடிக்ட் அவர்களின் மறைவு தொடர்பில் பாராளுமன்றத்தின் சார்பாக எமது அனுதாபச் செய்தியையும் தெரிவிக்குமாறு கௌரவ சபாநாயகரிடம் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி.”