“மயிலாடுதுறையில் மழை நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் தயங்குவது ஏன்?” – ஓ.எஸ்.மணியன் கேள்வி

மயிலாடுதுறை: “மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் பெய்த மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணத் தொகையை, தமிழக முதல்வர் உயர்த்தி வழங்காதது ஏன்?” என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 மட்டும் நிவாரணமாக அறிவித்துள்ள தமிழக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் சீர்காழியில் இன்று (ஜன.5) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டதுக்கு கட்சியின் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பி.வி.பாரதி தலைமை வகித்தார்.

முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான ஓ.எஸ்.மணியன், மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.பவுன்ராஜ் ஆகியோர் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்துப் பேசினர். முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராதாகிருஷ்ணன், ம.சக்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஓ.எஸ்.மணியன் கூறியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நவ.11-ம் தேதி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, தமிழக அரசு ஹெக்டேருக்கு ரூ.13,500 மட்டும் அறிவித்துள்ளது. கடந்த 2020-21-ம் ஆண்டு பழனிசாமி முதல்வராக இருந்தபோது, ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கியுள்ளார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என கடுமையாக கோரிக்கை வைத்தார். அப்படி கோரிக்கை வைத்த அவர் இன்று முதல்வராக வந்ததும் ஹெக்டேருக்கு ரூ.13,500 அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. நாங்கள் அவரைப் போல ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் கேட்கவில்லை. ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரமாவது வழங்க வேண்டும் என கேட்கிறோம். கூட்டுறவு விவசாய சங்கங்கள் ஒரு ஹெக்டேருக்கு ரூ.84,735 வழங்குகிறது. காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.86,574 வழங்கப்படுகிறது.

அப்படி இருக்கையில் இடுபொருள் மானியம் என்று கூறி அரசு ரூ.13,500 வழங்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, இயற்கை இடர்பாடு நிதியை மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கிறது. இதனை பயன்படுத்த மத்திய அரசு ஒரு அளவுகோள் நிர்ணயித்திருந்தாலும் கூட, சேதாரத்தின் அடிப்படையில் மாநில முதல்வர் தொகையை கூட்டி அறிவிக்கலாம். ஆனால் 100 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அத்தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஏன் தயங்குகிறார்?

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்த தமிழக அரசு, இந்த நிவாரணத் தொகை வழங்குவதில் தரங்கம்பாடி வட்டத்தில் 8 கிராமங்களை தவிர்த்திருப்பது எவ்வகையில் நியாயம்? ஒட்டுமொத்த சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். விலையில்லாமல் விதை வழங்க வேண்டும். விவசாயிகள் அடுத்து விவசாயம் செய்வதற்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்ய வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.