ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட நடிகை தாரனே அலிதூஸ்டி 18 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி உறவினர்களைச் சந்திக்க சென்ற 22 வயதான மாஸா அம்னி என்ற பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் சிறப்புப் படை காவல் அதிகாரிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை அவரது பெற்றோரிடம் கொடுக்காமல் காவல்துறையினரே அடக்கம் செய்ததற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன.
இந்தச் சம்பவம் ஈரான் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு அந்நாட்டு பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 300க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 15,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு ஈரான் அரசு தூக்குத் தண்டனை அறிவித்தது. இதில் சிலரது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களில் 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இங்கிலாந்து அரச குடும்பத்தில் மோதல்: ஹாரியை தாக்கினாரா வில்லியம்ஸ்?
ஆனால், இவற்றின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. தங்களுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனைக்கு எதிராக போராட்டக்காரர்கள் சிலர் மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். அவற்றில் சிலரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு மறுவிசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. அதேசமயம், மாஸா அம்னி மரணத்திற்கு காரணமான ஹிஜாப் ஆடை கண்காணிப்பு சிறப்புக் காவல் படையை நீக்கி ஈரான் அரசு உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஈரான் நாட்டைச் சேர்ந்த நடிகையான தாரனே அலிதூஸ்டி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “தி சேல்ஸ்மேன்” என்ற படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற அவரது கைதுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில், வரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட நடிகை தாரனே அலிதூஸ்டி 18 நாட்களுக்கு பிறகு அந்நாட்டு அரசால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.