அமிர்தத்தை விட சுவையான உளுந்தங்களி! – திருவாதிரை புராணம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

27 நட்சத்திரங்களில் ஆறாவது நட்சத்திரம் திருவாதிரை. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் வரும் நட்சத்திரங்களைப் பொறுத்து ஒவ்வொரு பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

உதாரணமாக :

  • சித்திரை மாதம் – சித்திரை நட்சத்திரம் -சித்ரா பௌர்ணமி

  • வைகாசி மாதம்-விசாகம் நட்சத்திரம் -வைகாசி விசாகம்

  • மார்கழி மாதம் -திருவாதிரை நட்சத்திரம் -திருவாதிரை

  • தை மாதம் -பூசம் நட்சத்திரம்-தைப்பூசம்

  • மாசி மாதம் -மகம் நட்சத்திரம் -மாசி மகம்

மார்கழி மாதத்தில் திருவாதிரை வரும் பௌர்ணமி அன்று திருவாதிரை திருநாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. திருவாதிரை சிவனுக்கு உகந்த நட்சத்திரம் என்று சொல்வார்கள். அனைத்து சிவன் கோவில்களிலும் ‘திருவாதிரை பண்டிகை’ சிறப்பாக நடைபெறும். இதை ‘ஆருத்ரா தரிசனம்’ என்றும் அழைப்பார்கள். வடமொழியில் திருவாதிரையை ‘ஆர்த்ரா’ என்பார்கள். அதுவே ஆருத்ரா என்றும் அழைக்கப்படுகிறது.

arudra darshan

சிதம்பரத்தில் சேந்தனார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவரும் அவரது மனைவியும் சிறந்த சிவ பக்தர்கள். தினமும் ஒரு சிவனடியார்களுக்கு உணவு அளித்த பிறகு அவர்கள் இருவரும் சாப்பிடுவார்கள்.

பட்டினத்தாரிடம் கணக்குப் பிள்ளையாக வேலை  பார்த்து வந்தார். அவர் துறவறம் சென்ற பிறகு சேந்தனார் வாழ்க்கை மாறிப் போனது.

விறகு வெட்டியாக  மாறினார். அதில்  சொற்ப  வருமானம்  கிடைத்த போதிலும் அன்னதானம் செய்வதை  தொடர்ந்தார்.

ஒரு நாள் கடுமையாக மழை பெய்த காரணத்தால் விறகு விற்பனையாகாமல் போனது. சிவனடியர்கள் யாராவது வந்தால் என்ன செய்வது என்று கவலையோடு வீடு திரும்பினார். அன்று அவர் மனைவி வீட்டில் இருந்த உளுந்தை அரைத்து மாவாக்கி அதில் சுவையான களி செய்து வைத்திருந்தார். வரும் அடியார்களுக்கு இது பிடிக்குமா… சாப்பிடுவார்களா என்று யோசித்தபடி இருவரும் காத்திருந்தார்கள்.

arudra darshan

அப்போது சிவனடியார் ஒருவர் மழைக்காக வீட்டு வாசலில் ஒதுங்கி நின்றார். சேந்தனாரைப் பார்த்ததும் “பசிக்கிறது சாப்பிட ஏதாவது இருக்குமா..?” என்று கேட்டதும் அவரை வீட்டுக்குள் அழைத்து சமைத்து வைத்திருந்த களியை மனைவியிடம் சொல்லி பரிமாற சொன்னார்.

அமிர்தத்தை விட சுவையாக இருக்கிறது இன்னும் இருந்தால் கொடுங்கள் அடுத்த வேளை உணவாகவும் இதையே வைத்துக் கொள்கிறேன் என்று சாப்பிட்ட அந்த அடியவர் சொன்னதும் தங்களுக்காக வைத்திருந்ததை அவரிடம் கொடுத்துவிட்டு இருவரும் பட்டினியாக இருந்தனர்.

arudra darshan

சிவனடியாராக வந்து சேந்தனார் வீட்டில் களி சாப்பிட்டவர் சிவபெருமான்.  அன்றைய தினம் ‘திருவாதிரை தினம்’. இறைவனே அவர் பெருமையை உலகறியச் செய்தார். சேந்தனாரும் இறைவனை வாழ்த்தி 

“மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள்..” என்று தொடங்கி 

 பல்லாண்டு கூறுதுமே..” என்று பதிமூன்று பாடல்களை பாடி முடித்தார். 

இந்த பாடல்கள் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் உள்ளது.

அன்று தொடங்கி திருவாதிரை நாளில் நடராஜ பெருமானுக்கு களி நைவேத்தியம் படைக்கப்பட்டு வருகிறது. 

முன்னொரு காலத்தில் திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவீர பக்தையாக இருந்து வந்தாள். அப்பெண்ணுக்கு திருமணம் முடிந்து சாந்தி முகூர்த்தம் நடக்கும் முன்பே அவள் கணவன் இறந்து விட்டான். தன்னை இப்படி சோதிக்கலாமா என்று அன்னையிடம் கண்ணீர் விட்டு கதறினாள் அப்பெண். அம்மையும் அப்பனும் அவள் கணவனுக்கு உயிர் கொடுத்து அவர்களுக்கு காட்சி அளித்து ஆசீர்வதித்தார்கள். இந்த நிகழ்வும் ஒரு மார்கழி மாத திருவாதிரை நாளில்தான் நடந்தது. சேந்தனாருக்கும், திரேதாயுகா வுக்கும் இறைவன் காட்சி . அளித்த இந்த நாளே ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Arudra Darshan

தேவாரத்தில் அப்பர் பாடிய முக்கியமான பத்து பாடல்கள் கொண்ட திருவாதிரை திருப்பதிகம் ‘ஆருத்ரா தரிசனம்’ கிடைத்த சந்தோஷத்தில் விளைந்த ஒன்று. நன்னிலம் அருகே உள்ள திருப்புகலூரில் திருஞானசம்பந்தரை திருவாரூரில் இருந்து வந்த அப்பர் சந்தித்ததின் காரணமாக உருவானது இப்பதிகம். தான் அடைந்த ஆனந்தத்தை அவரிடம் இப்பதிகத்தை பாடி தெரிவித்தார்.

ஒவ்வொரு பாடல் முடிவிலும் ‘ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்’ என்று முடித்து திருவாரூர் தியாகராஜ பெருமானுக்கு  பெருமை சேர்த்திருப்பார். இதைப் பாடினால் பெண்கள் சுமங்கலிகளாய் தங்கள் கணவனுடன் ஒற்றுமையாய் நோய் நொடியின்றி புத்திர பாக்கியத்துடன் நெடிது சௌபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் திருக்கோவில், உலகின் முதல் சிவன் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. முதல் நடராஜர் தோன்றிய ஊர் என்ற பெருமையும் உண்டு. திருவாதிரை இங்கு கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இத்தலத்தில்தான் இறைவன் பரத நாட்டியக் கலையை  உலக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பெரும்பாலான கோவில்களில் நடராஜர் கற்சிலையாகவோ பஞ்சலோக சிலையாகவோ இருப்பார். ஆனால் இந்த ஊரில் பச்சை மரகதக் கல்லால்  உருவாக்கப்பட்ட சிலை உள்ளது.

நடராஜர் சிலை

சிலையின் வீரியத்தை பக்தர்களால் தாங்க முடியாது என்பதால் ஆண்டு முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசப்பட்டு  இருக்கும். ஆருத்ரா தரிசனத்தன்று மட்டும் அந்த சந்தனக்காப்பு களையப்படும். இந்த அபூர்வ தரிசனம் காண்பதற்கு  ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.

சிவபெருமான் ஆடும் நடனம் ‘தாண்டவம்’ என்று அழைக்கப்படுகிறது. அவர் மகிழ்ச்சியாக ஆடும் நடனம்  ‘ஆனந்த தாண்டவம்’ என்று அழைக்கப்படுகிறது. சப்த தாண்டவங்கள் என்றால் அவர் ஆடிய  ஏழு தாண்டவங்கள் தொகுப்பு ஆகும். 

அவைகள் : 

1. ஆனந்த தாண்டவம் 2) சந்தியா தாண்டவம் 3) உமா தாண்டவம்  4) கௌரி தாண்டவம் 5) காளிகா தாண்டவம்   6) திரிபுர தாண்டவம் 7) சங்கரா தாண்டவம் .

ஆனந்த தாண்டவம் :  சிதம்பரம் எனும் தில்லையில் இறைவன் நடராஜர் உருவத்தில் ஆடும் நடனம் ‘ஆனந்த தாண்டவம்’என்று அழைக்கப்படுகிறது. பதஞ்சலி,வியாபாக்ர முனிவர்களின்   வேண்டுகோளுக்கு இணங்க இறைவன் ஆடிய தாண்டவம்  ‘ஆனந்த தாண்டவம்’ மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

இந்த நடனத்தை அடிப்படையாக கொண்டே பதஞ்சலி முனிவர் யோக சாஸ்திரத்தையும் பரத முனிவர் நடனக் கலையையும் தோற்றுவித்தனர்.  இந்த நடன தோற்றத்தில் இறைவனை தரிசித்தால் வாழ்வில் இன்பம் நிலைத்து நிற்கும்.

சிவபெருமானின் ஆனந்த தாண்டவம் பற்றி நான்காம் திருமுறையில்  திருநாவுக்கரசர் சுவாமிகள் கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்.

Sivan temple

“குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,

பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்

இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்

மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே! “

பொருள்:

வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும்வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும். 

இந்த பாடலை படிக்கும் போது ரஜினி நடித்த ‘தளபதி’திரைப்படம் நினைவுக்கு வரலாம். அதில் இடம்பெற்ற ‘ராக்கம்மா கையத்தட்டு’ பாடலின் இறுதியில் கதாநாயகி ஷோபனா மற்றும் அவருடைய தோழிகள் கைகளில் விளக்கு ஏந்தியபடி ‘குனித்த புருவமும்’ பாடலை பாடிக் கொண்டு செல்வர். சட்டென்று ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பார்கள்.

இசைஞானி ஒரு அருமையான மெட்டில் அதை பாட வைத்திருப்பார். 1991 ல் படம் வெளியான காலத்தில் மீடியாக்கள் அதிகமில்லை. ஆதலால் இது அப்பர் ஆண்டவனைப் போற்றி பாடிய பாடல் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Arudra Darshan

சோழர்கள் ஆட்சி காலத்திலும் திருவாதிரை திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதை கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் நாவலில் 5 ஆம் பாகத்தில் அத்தியாயம் 83 ல்‌ அழகாக விளக்கியிருப்பார். திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அது நடந்தது என்பது குறிப்பிட்டு இருப்பார்.

பாரம்பரியமான திருவாதிரை நாள் எங்கும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது . திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமி நாளில் இருப்பது. இதனால் கணவனின் ஆயுள் நீடிக்கும் என்பதால் சுமங்கலிகள் விரதம் இருப்பார்கள். அன்று நடராஜ பெருமானை தரிசனம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த நன்னாளில் நம்மிடம் இருப்பதை நம்மால் முடிந்த அளவு ஏழை எளியவர்களுக்கு தானமாகக் கொடுக்க முன் வரவேண்டும். பசிப்பிணி தீர்க்கப்படவேண்டும்.

===

திருமாளம் எஸ். பழனிவேல்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.