திருவனந்தபுரம், சிறுவயதில் கேரளாவில் பீடி தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்த சுரேந்திரன் கே.படேல், தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில், பீடி தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்த தம்பதிக்கு மகனாக பிறந்தவர் சுரேந்திரன் கே.படேல்.
குடும்ப வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாமல், தன் மூத்த சகோதரியுடன் பீடி சுற்றும் வேலைக்கு சென்றார்.
ஒருகட்டத்தில் கல்வியின் தேவையை உணர்ந்தவர், சிலரது உதவியுடன் பள்ளிக் கல்வியை முடித்தார்.
கேரளாவின் பையனுார் என்ற இடத்தில் உள்ள கல்லுாரியில், அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். பின், கோழிக்கோடு அரசு சட்ட கல்லுாரியில் சட்டம் பயின்றார்.
நர்ஸ் பணி
உத்துப் என்ற தொழிலதிபரின் வீட்டில் துப்புரவு பணியாளராக பணியாற்றிக் கொண்டே அவரது உதவியுடன் சட்டம் பயின்றார்.
காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஹோஸ்துர்க் என்ற இடத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற துவங்கினார்.
அப்போது சுபா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். அவருக்கு புதுடில்லியில் நர்ஸ் பணி கிடைத்ததும், புதுடில்லிக்கு குடிபெயர்ந்தார்.
அங்கு, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் உதவியாளராக பணியாற்றினார். பின், உச்ச நீதிமன்ற வழக்குகளில் தனியாக ஆஜராக துவங்கினார்.
இந்த நேரத்தில், சுரேந்திரனின் மனைவி சுபாவுக்கு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் நர்ஸ் பணி கிடைத்தது.
தேர்வில் தேர்ச்சி
மனைவிக்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஓராண்டு விற்பனை பிரதிநிதியாக பணியாற்றினார்.
பிரிட்டன் பொது சட்டத்தை பின்பற்றும் நாட்டில் ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர்கள், அமெரிக்காவில் தேர்வு எழுதி நேரடியாக வக்கீல் ஆக முடியும்என்ற விபரத்தை அறிந்தார்.
ஆனால் அமெரிக்கா வந்து இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த தேர்வை எழுத வேண்டும்.
ஏற்கனவே ஓராண்டு முடிந்துவிட்டதால், சுரேந்திரன் முன் ஒரே ஒரு வாய்ப்பு தான் இருந்தது. அந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, டெக்சாஸ் மாகாண மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
தற்போது அதே போர்ட் பெண்ட் கவுன்டி நீதிமன்றத்தின் 240வது நீதிபதியாக சுரேந்திரன் கே.படேல் தேர்வாகி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்