மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் இன்று (ஜன.6) நடப்பட்டது. இந்தப் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைப்பதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்ட அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதியும், பாலமேட்டில் 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். ஜல்லிக்கட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காளைகள் கலந்து கொள்ளும்.
இந்நிலையில், மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் அருகே உள்ள கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா இன்று (ஜன.6) நடைபெற்றது. இதன்படி வாடிவாசல் அருகில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஊர் மக்கள், ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். வெற்றி பெறும் முதல் மாட்டுக்கும், வீரருக்கும் கார் பரிசாக வழங்கப்படும்.பங்கேற்கும் அனைத்து மாடுகளுக்கும் தங்கக் காசு வழங்கப்படும். மாடுகளைப் பிடிக்கும் அனைத்து வீரர்களுக்கும் தங்கக் காசு வழங்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.