திருமண உறவில்கூட இணையருக்குள் பிரச்னை எழுகையில் அதனைத் தீர்த்து வைக்க குடும்பங்கள் இருக்கும். காதல் உறவில் பிரச்னை எழுகையில் அது சார்ந்து புலம்பவும், ஆலோசனை கேட்கவும் பெரும்பாலும் நண்பர்களையே நாடுகின்றனர். ஆண் – பெண் உறவின் சிக்கலைப் புரிந்து கொள்வது எளிதான காரியமல்ல. உறவுக்குள் இருப்பவர்களுக்கே என்ன பிரச்னை என்பது பிடிபடாத நிலையில், உறவுக்கு வெளியே இருக்கும் நண்பர்கள் வழங்கும் ஆலோசனை சரியானதாக இருக்குமா, அதற்கு செவி சாய்க்கலாமா என்பது பற்றி இந்த அத்தியாயத்தில் உரையாடுவோம்…
“நண்பர்களிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை, ஆனால் நாம்தான் முடிவெடுக்க வேண்டும்” என்கிறார் உளவியல் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்…
“காதல் உறவுக்கு மட்டுமல்ல பொதுவாகவே நிலம், வீடு, கார் வாங்குவது, என்ன படிக்கலாம், எந்தக் கல்லூரியில் படிக்கலாம் என பலவற்றுக்கும் நண்பர்களிடம் ஆலோசனை கேட்கிறோம். ஆலோசனையைக் கேட்டு அதனை உள்வாங்கி சரியான முடிவெடுப்பது ஒரு கலை. அதனை முறையாகச் செய்தால் எந்தப் பிரச்னையும் இல்லை.
ஒரு முடிவெடுக்கும் முன்பு அது சார்ந்து வேறொரு கண்ணோட்டத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலோசனை கேட்கிறோம், அதற்காக அதனை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. காதல் உறவை எடுத்துக் கொள்வோம். நம் நண்பராக இருந்தாலும் ஆலோசனை வழங்குகிற நபருக்கு அந்த உறவு சார்ந்த அறிவு, அனுபவம் மற்றும் அந்த உறவின் மீதான அக்கறை ஆகிய மூன்றும் இருக்க வேண்டும். நம் இணையரைப் பற்றி அவர்கள் எவ்வாறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதும் முக்கியம். நமது பிரச்னையை முழுமையாகக் கேட்டறிந்த பிறகு அவர்கள் வழங்கும் ஆலோசனையை பொருட்படுத்திக் கொள்ளலாமே தவிர இறுதி முடிவாக அதை எண்ணி விடக்கூடாது. ஒருவரல்ல 10 பேரிடம் கூட ஆலோசனை கேட்கலாம். வெவ்வேறான கண்ணோட்டங்கள் அதிலிருந்து வெளிப்படும். அவற்றில் இருந்து நம் உறவுக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு இறுதி முடிவை நாம்தான் எடுக்க வேண்டும்.
பிரச்னை உருவாகும் நேரத்தில் நாம் மனதளவில் அந்த உறவு மீதே வெறுப்பு கொண்டிருப்போம். அது அந்த நேரத்து மனநிலை மட்டுமே. ஒத்து வருமா, வராதா என்கிற குழப்பம் கூட அப்போது இருக்கும். பெரும்பாலும் நம் நண்பர்கள் நம்மை ஆற்றுப்படுத்தும் விதமாக நமக்கு சாதகமாகவே பேசுவார்கள். அதனைக் கேட்டுக்கொண்டு அந்த உறவைத் துண்டித்தோம் என்றால் பின்னாளில் வருத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படலாம்.
நாம் நம் நண்பரிடம் ஆலோசனை கேட்கும்போது திறந்த மனதுடன் கேட்க வேண்டும். நாம் ஒரு முடிவை எடுத்து விட்டு அதையேதான் அவர்களும் சொல்ல வேண்டும் என நினைக்கக்கூடாது. நம் மீதான தவறுகளை சுட்டிக்காட்டினாலும் அதை பொருட்படுத்த வேண்டும். அதை விடுத்து “நீ என் ஃபிரெண்டா இருந்துட்டு எனக்கு சப்போர்ட் பண்ணாம அவளுக்கு / அவனுக்கு சப்போர்ட் பண்ற” என்று கோபித்துக் கொள்ளக்கூடாது. இப்படி கோபித்துக் கொள்வோம் என்பதாலாயே நம் நண்பர்கள் நம் மீதான தவறை சுட்டிக்காட்டாமல் நம்மை ஆறுதல் படுத்தும்படியாகப் பேசுகின்றனர். இதனால் இழப்பு நமக்குதான்.
ஆலோசனை கேட்ட பிறகு அது சார்ந்து யோசிக்க நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். நம் நண்பர்கள்தான் என்றாலும் அவர்களின் மதிப்பீடுகள், காதல் உறவை அவர்கள் புரிந்து கொண்டிருக்கும் விதம், வாழ்வியல் என அனைத்தும் வேறுபட்டிருக்கும் நிலையில் அவர்கள் சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. அதற்காக அவர்களின் ஆலோசனையைப் புறந்தள்ள வேண்டும் என்றில்லை. உறுதியான, இறுதியான முடிவை நாம்தான் எடுக்க வேண்டும். அது தவறாகி விட்டால் ஆலோசனை வழங்கிய நண்பர்களைக் குறை கூறக்கூடாது” என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.
“ஆண் – பெண் உறவில் சிக்கல் ஏற்படும் போது அதைத் தீர்க்க மூன்றாவது நபரின் ஆலோசனை ஒத்து வராது” என்கிறார் மானுடவியலாளர் மோகன் நூகுலா…
“பெரும்பாலும் காதல் அல்லது திருமண உறவில் இருப்பவர்கள், தங்கள் பிரச்னைக்கு ஒரு தீர்வை ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருப்பார்கள், அந்தத் தீர்வை நோக்கிய ஆலோசனைகளை எதிர்பார்ப்பார்களே தவிர, உண்மையான தீர்வைத் தேடுவதில்லை. தங்கள் கருத்துக்கு ஒத்துப்போகாத எந்த ஆலோசனைகளையும் அவர்கள் பின்பற்றப்போவதில்லை.
மேற்கத்திய நாடுகளில் ஆண் – பெண் உறவினை பலப்படுத்தவும், உறவுச் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லவும் பல ஆலோசகர்கள் இருக்கிறார்கள், இணையத்தில் நீங்கள் தேடினால் ரிலேஷன்ஷிப் ஆலோசனை தருபவர்களில் நூற்றுக்கணக்கானவர்களைப் பார்க்கலாம். அவர்கள் அனைவருமே அமெரிக்கர்களாகவோ, ஐரோப்பியர்களாகவோதான் இருப்பார்கள். அது அந்த கலாசாரத்துக்குப் பொருந்திப் போகலாம், அங்கு காதலுக்கு குடும்பம், உறவுகள் என நம் நாட்டில் உள்ளது போன்ற பிரச்னைகள் கிடையாது. அப்படியான சூழலில்கூட அங்குள்ள, ரிலேஷன்ஷிப் ஆலோசகர்களினால் தீர்வுகளை முன் வைக்க முடிகிறதா என்றால் இல்லை என்பதே நிதர்சனம்.
இந்தியா போன்ற நாடுகளில் அந்த இடத்தை நண்பர்களோ, உளவியல் ஆலோசகர்களோ தான் ஈடு செய்ய வேண்டியுள்ளது. இன்றைய நவீன காலத்தில் கார்ப்பரேட் குருக்களும் இந்தப் பட்டியலில் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம் நம் குடும்பங்கள் இன்றும் காதலை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதால்தான். திருமண உறவுக்குள் ஏற்படும் பிரச்னைகளை ஓரளவுக்கு குடும்பங்கள், உறவுகள் தீர்த்து வைக்கலாம், அதுவுமே பல நேரங்களில் நிர்ப்பந்தித்தின் அடிப்படையிலேயே நடக்கிறது. அதனால், நம் சமூக சூழலில், நண்பர்கள் மட்டுமே ரிலேஷன்ஷிப் ஆலோசனை தரும் இடத்தில் இருக்கிறார்கள், அவர்களது குறைந்தபட்ச அனுபவம், நண்பர் மீதான அக்கறை அதில் இருக்கலாம். அதில் இருந்து ஒவ்வொருவரும் தேவையானதை எடுத்து, சுயமாக முடிவு செய்து கொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.
இன்னும் சில காலங்களில் இந்தியாவிலும் கூட ரிலேஷன்ஷிப் ஆலோசகர்கள் வரலாம். அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால், எத்தனை ஆலோசகர்கள் வந்தாலும், ஆண், பெண் உறவுகளை அவர்களே பேசி தீர்த்துக்கொள்வதே தீர்வாக இருக்கும்” என்கிறார் மோகன் நூகுலா.
பார்வைக் கோணம்
ராஜலக்ஷ்மி, அரசு ஊழியர்.
காதல் அல்லது திருமண உறவில் பிரச்னைகள் ஏற்படுறப்ப நண்பர்கள்கிட்ட அட்வைஸ் கேட்குறது எல்லா நேரங்களிலும் சரியா வாரது. ஏன்னா நண்பர்களுக்கும் நம்மோட வயசுதான் இருக்கும்ங்கிறப்போ, அவங்களாலும் கூட நம்முடைய பிரச்னைக்கு சரியான தீர்வைச் சொல்ல முடியாது. ஒரு சிலர் தங்களோட பர்சனல் அனுபவங்களில் இருந்து சில கருத்துகளை சொல்லலாமே தவிர அதில் தீர்வை நோக்கிச் செல்ல எதுவுமே இருக்காது. இது எல்லாத்தையும் மீறி நம்மோட நண்பர்கள் தங்கள் குடும்ப சூழல், உறவை கையாண்ட அனுபவத்தில் இருந்து சரியான ஆலோசனை கூறலாம், அப்படியான ஆட்கள் ரொம்ப குறைவு. அதனாலதான் ரிலேஷன்ஷிப் பிரச்னைகளில் நண்பர்களின் ஆலோசனைகள் வொர்க் அவுட் ஆகுறது இல்லைன்னு நினைக்கிறேன்.
ரிலேஷன்ஷிப் பிரச்னைகளுக்கு நம்மோட நலம் விரும்பிகள், பெற்றோர்கள்கிட்டயே கூட ஆலோசனை கேட்கலாம். அவங்க, அவங்களோட வாழ்க்கை அனுபவத்துல இருந்து நமக்கு நல்ல அட்வைஸ் தருவாங்க. இந்தத் தலைமுறை பெற்றோர் எல்லாருமே ஒரு குழந்தையோ, இரண்டு குழந்தையோதான் வெச்சிருக்காங்க. பிள்ளைகளோட பல விஷயங்களுக்கு மதிப்பும் தர்றாங்க. அப்படி இருக்குறப்போ நாம வீட்ல இருக்க பெரியவங்ககிட்ட ஆலோசனை கேட்கிறதுதான் சரியா இருக்கும். நம்மோட பிரச்னைகளைப் பகிர்ந்துக்கவும், ஆறுதல் பெறவும் நண்பர்கள் கிட்ட பேசுறது தப்பில்லை. ஆனா அதுல எந்தத் தீர்வும் கிடைக்காதுங்குறதுதான் என்னோட கருத்து.
ஆர்.சர்வேஷ், மென்பொருள் துறை
காதல் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு தேடுவதாக எண்ணி நண்பர்களிடம் அதைப் பகிர்வதில்தான் பலரின் பிரச்னைகளும் பெரிதாகிறது. இரு நபர்களின் தனிப்பட்ட பிரச்னைகளின் மூல காரணங்கள் என்னவென்று தெரியாத மூன்றாம் நபராய் இருக்கும் நபரிடம் சென்று தீர்வினையோ ஆலோசனைகளையோ கேட்டால் எப்படி சரியான பதில் கிடைக்கும் என்பதை பெரும்பாலானவர்கள் யோசிப்பதில்லை.
சிறு சிறு பிரச்னைகள் என்றால் முடிந்தமட்டும் அதை பகிர்வதைத் தவிருங்கள். உங்கள் இருவருக்குள்ளாகவே பேசி சரி செய்ய முயலுங்கள். காதலிக்க ஆரம்பித்தது தொடங்கி எல்லாவற்றையும் உங்கள் நண்பர்களிடம் பகிர வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவரின் பார்வைக் கோணமும் தனியானது. நீங்கள் பார்த்து ரசிக்கும் ஒரு விஷயம் இன்னொருவருக்கு ஏற்புடையதாய் இருக்காது. நீங்கள் உங்கள் ஊடல்களைக் கையாளும் அல்லது அதைப் பார்க்கும் விதத்திலேயே நீங்கள் அதைப் பகிரும் நபரும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முட்டாள்தனமான தீர்வையோ ஆலோசனையையோ கூறி உங்களை இன்ஃப்ளுயன்ஸ் செய்யும் வாய்ப்புகள் அதிகம். என்ன இருந்தாலும் நண்பன் ஆயிற்றே சரியாகத்தான் இருக்கும் என்று அந்தத் தீர்வினைக் கையாளும் போது, எளிதில் தீரக்கூடிய பிரச்னை பெரிதாகக்கூடிய வாய்ப்பே அதிகம்.
உங்கள் காதலியை / காதலனை உங்களைத் தவிர யாரால் சரியாகப் புரிந்து கொண்டிருக்க முடியும் என்று யோசியுங்கள். அவர்களுக்கான தீர்வை உங்களைத் தவிர மூன்றாம் நபரால் எப்படி சரியாகக் கூற இயலும் என்று சிந்தியுங்கள். காதலில் நண்பர்கள் உதவி தேவைதான். அது உங்களைச் சேர்த்து வைப்பதற்கான ஆலோசனைகளை அளித்துவிட்டு முடிவுகளை உங்களிடம் விட்டு விடக்கூடிய நண்பர்களாய் இருந்தால் மட்டும் சரி. இதுதான் வாய்ப்பென்று பிரச்னைகளைப் பெரிதாக்கிக் காண்பித்து உடைக்கும் நபர்கள் இல்லை. இன்றைய காலகட்டத்தில் யாராக இருந்தாலும் உங்கள் அந்தரங்கத்தில் எளிதில் நுழைய முடியாதபடி அதன் எல்லையை வலுவாக எழுப்புவதே சிறந்தது.