காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் விழா ஏற்பாடு செய்யத் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தன்னார்வலர்களுக்குப் பாராட்டு விழா கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் இரண்டு நாள்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது.
தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்பதே சரியாக இருக்கும்” எனப் பேசினார். அவரின் இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த விவகாரத்தில், `ஆளுநர் ரவி பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-ன் பிரசாரகராகச் செயல்படுகிறார்’ என அரசியல் கட்சியினர் சாடினர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் ஆளுநரை விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார்.
அந்தப் பதிவில், “தமிழகமா? தமிழ்நாடா? இது குதர்க்கவாதம். `ஆர்.என்.ரவி என்பதைவிட, ஆர்.எஸ்.எஸ்.ரவி என்பதே சரியாக இருக்கும்.’ சனநாயகத்துக்கான ஆளுநர் என்பதைவிட, சனாதனத்துக்கான ஆளிவர் என்பதே சரியாக இருக்கும். அரசமைப்புச் சட்டத்துக்கான பிரதிநிதி என்பதைவிட, சங்பரிவார்களுக்கான அரசியல்வாதி என்பதே சரியாக இருக்கும்” என திருமாவளவன் விமர்சித்திருக்கிறார்.