வள்ளியூர்: நெல்லையில் தமிழக சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆளுநர் என்பவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு பேச வேண்டும். இந்தியா என்பது ஒரு மதசார்பற்ற நாடு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 159ன் படி பதவி பிரமாணம் செய்து விட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக கருத்துக்கள் செல்வதை ஆளுநர் தயவு செய்து நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 1986ம் ஆண்டு டிசம்பர் மாதம் பேராசிரியர் அன்பழகன் தலைமையில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 17ல் இந்தி ஆட்சி மொழி என்கிற நகலை பொது வெளியில் கிழித்து எறிந்தனர். அன்றைய ஆட்சிக்காலத்தில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். சபாநாயகர் பி.எச்.பாண்டியன், இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆர்ட்டிக்கில் 188ன் படி பதவி பிரமாணம் செய்துவிட்டு அரசியலமைப்பு சட்டத்தினை அவமதிக்கும் வகையில் அதை கிழித்து எறிந்த 10 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்தார் என்பது வரலாறு. அதுபோன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவி பிரமாணம் செய்து கொண்டு சட்டத்திற்கு புறம்பாக பேசுவதை கவர்னர் தவிர்ப்பது நல்லது’ என்றார்.