ஆளுநர் பெயரை மாற்றிக் கொள்வாரா?…கமல்ஹாசன் சரமாரி கேள்வி….

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றச் சொல்லும் ஆளுநர், தனது பெயரை ‘ரவி’ என்பதற்கு பதிலாக ‘புவி’ என மாற்றிக்கொள்வாரா? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கிண்டியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது என்றார். தமிழ்நாட்டில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன என்று கூறிய அவர், இது ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.

இந்தியா என்பது ஒரே நாடு என்று கூறிய அவர், தமிழ்நாடு என்று சொல்வதை விட ‘தமிழகம்’ என்று சொல்வதே சரியாக இருக்கும் என்றார். தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ரவி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் நடைபயணம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அறுசுவை விருந்து அளித்தார். இதில், பேசிய கமல்ஹாசன் பா.ஜ.க. மதத்தை வைத்து அரசியல் செய்கிறது என்றார்.

மத அரசியலை எதிர்ப்பதற்காகவே, காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றோம் என்று கூறினார். மதத்துக்கு எதிரான அரசியலை தடுக்கவேண்டும். தேசத்தின் ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில், தேசிய ஒற்றுமை யாத்திரை அமைந்துள்ளது என்று கூறினார். அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றார்.

சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறிய கமல், விரைவில் அதற்கான இடம் அறிவிக்கப்படும் என்றார். எந்த கட்சியாக இருந்தாலும், மதத்தை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது ஏனென்றால், இது தமிழ்நாடு என்று கூறினார். அண்ணா என்பது வெறும் பெயர் மட்டும் இல்லை. அது ஒரு உறவு என்றார்.

நம்முடைய நலன் சார்ந்து யார் பேசுகிறார்களோ, அவர்கள் பின்னால்தான் மக்கள் செல்வார்கள். அந்த நலன்களைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார். நீண்ட, நெடிய பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு கிடைத்திருக்கிறது என்று கூறிய அவர், இதை மாற்ற சொல்லுவதற்கு அவர் யார்? என்றார்.

அவருடைய பெயரை ரவி என்பதற்கு பதிலாக புவி என மாற்றச்சொன்னால், மாற்றிக்கொள்வாரா? மதத்தை அரசியலின் கருவியாக பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார். அவர்களுடைய அரசியல் என்பது மதத்துக்கானது. மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் மக்களுக்கானது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.