கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன்றுக்குட்டியை காப்பாற்ற முயன்ற விவசாயி கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பூங்கிலேரி பகுதியை சேர்ந்தவர் விவசாயி நாகராஜ் (37). இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவர் நேற்று விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது கன்று குட்டி கிணற்றில் தவறி விழுந்து உள்ளது.
இதைப் பார்த்த நாகராஜ் கன்றுக்குட்டியை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். இதில் நாகராஜ் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதையடுத்து அவ்வழியாக வந்த நாகராஜின் உறவினர்கள் கிணற்றின் மேல் பகுதியில் நாகராஜின் செருப்பு மற்றும் உடைகள் இருந்ததால், கிணற்றுக்குள் பார்த்துள்ளனர்.
அப்பொழுது கிணற்றுக்குள் உயிருக்கு போராடி இருந்த கன்றுக்குட்டியை மீட்டனர். மேலும் நாகராஜ் கிணற்றில் மூழ்கி இருக்கலாம் என்பதால் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக தேடி சேற்றில் சிக்கி உயிரிழந்த நாகராஜை மீட்டனர்.
பின்பு போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு நாகராஜின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.