புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அனைத்து மாநில தலைமை செயலர்களின் தேசிய மாநாடு நேற்று துவங்கியுள்ள நிலையில், மாநில அரசுகளின் ஆலோசனை மற்றும் பங்களிப்புடன் திட்டங்களை வகுப்பது, அதை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக, கூட்டுறவு கூட்டாட்சியின் புதிய சகாப்தத்தை மத்திய அரசு துவக்கி வைத்துள்ளதாக அதிகாரிகள் புகழாரம் சூட்டினர்.
அனைத்து மாநிலங்களின் தலைமை செயலர்கள் பங்கேற்ற தேசிய மாநாடு, ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் கடந்த ஆண்டு நடந்தது.
மாநிலங்களின் பங்களிப்பு
இந்த மாநாடு மிகவும் ஆக்கப்பூர்வமாக நடந்து முடிந்ததை அடுத்து, இரண்டாம் ஆண்டு தேசிய மாநாடு நேற்று பிரதமர் மோடி தலைமையில் புதுடில்லியில் துவங்கியது.
இந்த மாநாடு குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
தலைமை செயலர்கள் மாநாடு விரைவான மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சியை, மாநிலங்களின் பங்களிப்புடன் வழங்குவதற்கு உதவி புரிகிறது.
இது, புதிய இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத துாண் என்பதை பிரதமர் மோடி உறுதியாக நம்புகிறார்.
குஜராத்தின் முதல்வராக,13 ஆண்டுகள் பதவி வகித்தவர் மோடி. எனவே, மாநிலங்களின் வளர்ச்சிக்கு அதன் வளங்கள் தான் அடிப்படை என்பதை அவர் நன்கு அறிவார்.
எனவே தான், அரசாங்க வரிகளின் தொகுப்பில் மாநில அரசுகளின் பங்கை 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்த முடிவெடுத்தார்.
இது, மாநிலங்களின் தேவைக்கேற்ப திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்த அதிக ஆதாரங்களை வழங்கியது.
ஜி.எஸ்.டி., வரி விவகாரத்தில் மத்திய – மாநில அரசுகள் ஒருங்கிணைந்து முடிவுகளை எடுப்பதற்காகவே ஜி.எஸ்.டி., கவுன்சில் உருவாக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் நிதி கூட்டாட்சிக்கு மிக சிறந்த உதாரணமாக உள்ளன.
மத்திய அரசு திட்டங்கள் மாநிலங்களில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை அறிய, ‘பிரகதி’ எனப்படும் திட்டத்தை பிரதமர் செயல்படுத்தினார்.
இதில், பிரதமர் தலைமையில் மத்திய அரசு செயலர்கள், அனைத்து மாநில தலைமை செயலர்கள் சந்தித்து, திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடு குறித்து விவாதிக்கின்றனர்.
ஆலோசனை
ஆண்டுதோறும் நடந்து வந்த டி.ஜி.பி.,க்கள் மாநாட்டில், முன்னாள் பிரதமர்கள் சம்பிரதாயத்துக்கு பங்கேற்று வந்தனர். ஆனால், பிரதமர் மோடி அனைத்து அமர்விலும் பங்கேற்றதுடன், சுதந்திரமான கருத்து பரிமாற்றம் ஏற்பட வழிவகுத்தார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த மாநில உள்துறை அமைச்சர்களின் கூட்டம் மற்றும் செப்டம்பரில் நடந்த மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாடு ஆகியவற்றிலும் பிரதமர் பங்கேற்றார்.
நாட்டில் கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்த, மண்டல கவுன்சில் கூட்டங்களை மோடி அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது.
‘ஜி – 20’ அமைப்புக்கு நாம் தலைமை ஏற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு முழுதும் பல்வேறு கூட்டங்களை மாநிலங்களில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, மாநில கவர்னர்கள் மற்றும் முதல்வர்களுடன் பிரதமர் மோடி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
மத்திய அரசு புதிய கொள்கைகளை இயற்றுவது, அதை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசின் பங்களிப்பு மற்றும் ஆலோசனை இருக்க வேண்டும் என்பதை பிரதமர் விரும்புகிறார். எனவே தான், இரண்டாவது ஆண்டாக தலைமை செயலர்கள் மாநாட்டை கூட்டியுள்ளார்.
இதன் வாயிலாக, கூட்டுறவு கூட்டாட்சியில் புதிய சகாப்தம் உருவாகி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்