புதுடெல்லி: கேஒய்சி அப்டேட் செய்ய வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்ல தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கி தனது வாடிக்கையாளர்களின் அடையாளம் மற்றும் முகவரி குறித்த தகவலை பெறும் நடைமுறை கேஒய்சி (உங்கள் வாடிக்கையாளரை அறிவீர்) எனப்படுகிறது. இதனால் வங்கிகள் அளிக்கும் சேவைகள் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. வங்கியில் கணக்கு தொடங்கும்போது கேஒய்சி அளிக்க வேண்டும். அவ்வப்போது, வாடிக்கையாளர்கள் அடிப்படை தகவல்களை உறுதி செய்ய கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும்.
2002ம் ஆண்டு பண மோசடி தடுப்பு சட்டத்தின்(பிஎம்எல்ஏ) கீழ் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை புதுப்பிக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேஒய்சிக்காக டிசம்பர் 31ம் தேதிக்குள் (2022 ம்ஆண்டு) வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியை நேரடியாக அணுக வேண்டும். அல்லது அவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று தகவல் வெளியானது. இதையடுத்து, கேஒய்சிக்காக வாடிக்கையாளர்களை வங்கிக்கு அழைக்ககூடாது என்று ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்தி காந்த தாஸ் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், கேஒய்சியை புதுப்பிக்க வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரடியாக செல்ல தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக வாடிக்கையாளர்கள் இமெயில், தொலைபேசி, ஏடிஎம்,நெட்பேங்கிங் அல்லது கடிதம் மூலம் இவற்றை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், முகவரி மாற்றம் செய்தால் மேற்குறிப்பிட்ட வழிகளில் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆவணத்தை சமர்ப்பித்தால், வங்கிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சரிபார்க்கும்.
மேலும் சரியான ஆவணங்கள் இல்லாவிட்டாலோ அல்லது ஆவணங்கள் காலாவதியாகி விட்டாலோ வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் புதியவற்றை கேட்கலாம். ரிமோட் வழியாக கேஒய்சி அப்டேட் வழங்கும் வங்கிகளில் வீடியோ அழைப்பு மூலமாகவும் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.