கோயில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது: உயர் நீதிமன்றம் 

சென்னை: கோயில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க உத்தரவிடக் கோரி வெங்கட்ராமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரர், தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மூன்றாவது நபருக்கு வழங்கியிருக்கிறார். அதோடு மட்டுமின்றி அந்த நிலத்தை கிரையமும் செய்திருக்கிறார்” எனக்கூறி, அதுதொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

அந்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், “கோயில் நிலத்தை மூன்றாம் நபருக்கு கொடுக்க என்ன உரிமை உள்ளது?” என்று மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர். மேலும், “கோயில் சொத்துகளை பாதுகாப்பதாக கூறி வழக்கு தொடர்ந்துவிட்டு, கோயில் சொத்துகளை சுரண்ட அனுமதிக்க முடியாது” என்றனர்.

அப்போது குறுக்கிட்ட அறநிலையத் துறை வழக்கறிஞர், “ஆக்கிரமிப்பை அகற்ற அறநிலையத் துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முடக்கும் வகையில் மனுதாரர் மனுத்தாக்கல் செய்துள்ளார்” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மனுதாரர் வெங்கட்ராமன், தனது சகோதரர் தான் கோயில் நிலத்தை பெற்றார். கோயில் நிலத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என தான் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், “கோயில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது. அந்த நிலம் தற்போது யார் வசம் உள்ளது என்பதை கண்டறிந்து, உடனடியாக அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.