பனாஜி: வடக்கு கோவா மாவட்டத்தில் மோபா என்ற இடத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் பெயரில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டது. இந்த விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த விமான நிலையத்துக்கு, ஹைதராபாத்திலிருந்து முதல் பயணிகள் விமானம் நேற்று வந்தது. இதன் மூலம் புதிய விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தொடங்கியது. ஹைதராபாத்தில் இருந்து 179 பயணிகளுடன் கோவா வந்த இண்டிகோ விமானம் நேற்று காலை 9 மணியளவில் மனோகர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. மத்திய அமைச்சரும், வடக்கு கோவா எம்.பி.யுமான ஸ்ரீபத் நாயக், மாநில முதல்வர் பிரமோத் சவந்த், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோகன் கான்டே ஆகியோர் பயணிகளை வரவேற்றனர். விமான நிலையத்துக்கு வெளியே பேண்ட் வாத்தியக் குழுவினரும் பயணிகளுக்கு வரவேற்பு அளித்தனர். கோவாவின் புதிய விமான நிலையத்துக்கு நேற்று மொத்தம் 11 விமானங்கள் வந்தன.
கோவாவில் மற்றொரு சர்வதேச விமான நிலையமும் உள்ளது. இது தெற்கு கோவாவில் டமோலிம் என்ற இடத்தில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சா விமான தளத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது.