விமானத்தில் சக பயணியின் இருக்கையின்மீது சிறுநீர் கழித்த நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விளக்கமளிக்கும்படி DGCA நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த நவம்பர் 26ஆம் தேதி நியூயார்க்கிலிருந்து புது டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வயதான பெண் பயணியின் இருக்கைமீது சிறுநீர் கழித்த அந்த நபரின் பெயர் ஷேகர் மிஸ்ரா என்றும், அவர் மும்பையை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. ஆனாலும் அந்த நபருக்கு ஏர் இந்தியா நிறுவனம் பெரிய தண்டனை எதுவும் வழங்கவில்லை எனத் தெரிகிறது.
சுயநினைவற்ற நிலையில் இருந்த மிஸ்ரா, அந்த பெண்ணின் இருக்கை அருகே சென்று, பேண்ட் ஜிப்பை கழற்றி சிறுநீர் கழித்ததுடன், மற்றொரு பயணி தனது இருக்கைக்கு செல்லுமாறு எச்சரிக்கும்வரை தனது அந்தரங்க உறுப்பையும் வெளிகாட்டியதாக விவரங்கள் தெரிவிக்கின்றன.
சக பயணியிடம் தவறாக நடந்துகொண்ட பயணிமீது முறையான நடவடிக்கை எடுக்காத ஏர் இந்தியா நிறுவனத்துக்கு DGCA நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூத்த ஏர் இந்தியா நிர்வாகிகள், விமானிகள் மற்றும் ஊழியர்கள் விளக்கமளிக்கும்படி கேட்டுள்ளது. மேலும், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளியை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டெல்லி காவல்துறை புதன்கிழமை தெரிவித்திருக்கிறது. சக பயணியிடம் தவறாக நடந்துகொண்ட நபர்மீது இந்திய சட்டப்பிரிவுகள் 354,509 மற்றும் 510-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM