சென்னையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார். அவர் முகப்பேர் பகுதியில் உள்ள பிரபல கராத்தே பயிற்சி பள்ளியில் கராத்தே மாஸ்டர் கருணாநிதி என்பவரிடம் கராத்தே பயின்று வந்துள்ளார்.
சினிமா படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணிப்புரிந்திருப்பதாகவும், அமைச்சர்களை தெரியும் என்று கூறி கருணாநிதி மாணவர்களை கராத்தே பயிற்சி மையத்தில் சேர்த்து பயிற்சி அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் 14 வயது சிறுமி பயிற்சி முடிந்து வீடு திரும்பாததால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் சிறுமியை தேடிவந்தனர்.
இந்நிலையில், சிறுமி ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து தனது பெற்றோருக்கு தொடர்பு கொண்டு முகப்பேர் பேருந்து நிலையத்தில் நிற்பதாக கூறினார். பின்னர் சிறுமியை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கராத்தே மாஸ்டர் கருணாநிதி ஒரு நாள் முழுவதும் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். மேலும், கராத்தே மாஸ்டர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ பதிவு செய்து தொடர்ந்து 7 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியது தெரியவந்தது.
இதையடுத்து கராத்தே மாஸ்டர் கருணாநிதியை கைது செய்தனர். அவர் மீது பாலியல் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
newstm.in