சுயநலத்திற்காக அதிமுகவை பலியாக்க பார்க்கின்றனர்: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

புதுடெல்லி: “திமுகவிலிருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாக வெளியேற்றப்பட்டதால்தான் எம்ஜிஆர் அதிமுக என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார். அந்த கசப்பான அனுபவத்தின் காரணமாக, கட்சி முடிவுகளை எப்போதும் அடிப்படைத் தொண்டர்கள் மூலமாகவே எடுக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்” என்று ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் 3-வது நாளாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு அதிகாரம் இல்லை.

அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆர் மறைந்த போது கட்சியின் தற்போதைய நிலையைப் போன்றே பிளவை சந்தித்தது. அதனைத்தொடர்ந்து ஜெயலலிதா கட்சியின் நிர்வாகத்தை கையில் எடுத்தார். அதன்பின்னர் கட்சியின் சட்ட விதிகள் படியே தொடர்ச்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. மேலும், அதிமுகவின் வழக்கமான பொதுக்குழு கூட்டங்களுக்கும், சிறப்பு பொதுக்குழு கூட்டங்களுக்கும் இடையே பல வித்தியாசங்கள் உள்ளன. அதிமுக பொதுக்குழு கூட்டம் எவ்வாறு அறிவிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் கட்சி விதிமுறைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுகவிலிருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாக வெளியேற்றப்பட்டதால்தான் எம்ஜிஆர் அதிமுக என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார். ஆனால் அது ஒரு கசப்பான அனுபவமாகவே அவருக்கு இருந்தது. எனவே எம்ஜிஆர் எப்போதும் கட்சி முடிவுகளை அடிப்படைத் தொண்டர்கள் மூலமாகவே எடுக்க வேண்டும் என்று விரும்பினார். அதன் அடிப்படையில்தான் கட்சி விதிகளையும் அவர் கட்டமைத்தார். மேலும், சில முக்கிய விதிமுறைகளை எப்போதும் மாற்றி அமைக்க கூடாது என்று அவர் விரும்பினார். ஆனால் அத்தகைய விதிமுறைகளை அவசரகதியில் எடப்பாடி தரப்பினர் மாற்றியுள்ளனர். இதன் மூலம் அதிமுகவின் அடிப்படை நோக்கமே மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது.

பொதுக்குழு நடக்கும்போது, திடீரென ஒருவர் மைக்கின் முன்பாக வந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுகிறது என உரக்க கூறுகிறார். அதனை ஒட்டுமொத்த பொதுக்குழுவும் ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்படுகிறது. இது ஒரு அதிகார துஷ்பிரயோகம். அதிமுகவில் இன்று தேர்தல் நடந்தாலும் நான்தான் வெற்றி பெற்று இபிஎஸ் தரப்பு கோரி வரும் ஒற்றை தலைமையில் அமர்வேன். ஏனெனில், அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவும் எனக்குதான் இருக்கிறது. எனவே, தற்போது ஒரு தனி மனிதனின் சுயநலத்திற்காகவும் பதவி வெறிக்காகவும் அதிமுக என்ற கட்சி பலியாக பார்க்கிறது.

அதிமுகவின் பொருளாளராக இருந்த நான், கட்சியின் மிக மூத்த தலைவர். கட்சிக்கு பலமுறை நெருக்கடி ஏற்பட்டபோது முன்னின்று அதனை சமாளித்தவன். கட்சி தலைமை, மூன்று முறை முதல்வர் பதவியை கொடுத்தபோதும் கட்சிக்கும், கட்சி தலைமைக்கும் விசுவாசத்துடன் நடந்து தலைமையின் நன்மதிப்பை பெற்றவன். அத்தகைய ஒருவனைத்தான் தான் இபிஎஸ் தரப்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். எனவே, அதிமுகவையும், பொதுக்குழுவையும் எடப்பாடி தரப்பினர் சொந்தம் கொண்டாடுவதை ஏற்க முடியாது” என வாதிடப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு (ஜன.10) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.