புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இளம் பெண் அஞ்சலி சிங் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளர் அசுதோஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி அதிகாலையில் அஞ்சலி சிங் என்ற இளம் பெண் சென்ற ஸ்கூட்டி மீது பலீனோ கார் ஒன்று மோதியது. காரின் அடியில் சிக்கிக் கொண்ட இளம் பெண் பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டத்தில் கொடூரமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
விபத்தில் சிக்கிய இளம் பெண் தனியாக செல்லவில்லை அவர் பின்னால் இன்னொரு பெண் இருந்தார் என்பது கண்டறியப்பட்டது. அந்தப் பெண் அளித்தப் பேட்டியில் அஞ்சலி சிங் போதையில் இருந்தார் என்று கூறியது இன்னொரு திருப்பமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் காருக்கு கீழ் யாரோ சிக்கிவிட்டனர் என்று தெரிந்தே தான் காரை ஓட்டியவர்கள் அதனை தொடர்ந்து இயக்கினர் என்றும் அஞ்சலியின் தோழி நிதி கூறினார்.
இந்நிலையில், காரின் உண்மையான உரிமையாளரை காவல்துறை கைது செய்துள்ளனர். காரில் இருந்த ஐந்து பேரும் அசுதோஷிடம் இருந்து தான் காரை இரவலாக வாங்கியுள்ளனர் என்று தெரியவந்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக வியாழக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காவல்துறை சிறப்பு அதிகாரி, நாங்கள் இந்த வழக்கில் தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிருஷ்ணன், மிதுன், மனோஜ் மிட்டல் என்ற ஐவரை கைது செய்தோம். அவர்களிடம் நடத்திய விசாரணையில் காரை இயக்கியது தீபக் அல்ல அமித் என்பது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கில் மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பதும் உறுதியானது. மேலும் இருவரை தேடி வருகிறோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் காரின் உரிமையாளர் அசுதோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அசுதோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். காரை ஓட்டிய அமித் கண்ணாவுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை. அவர் நடந்த சம்பவம் குறித்து தனது சகோதரர் அன்குஷுக்கு தெரிவித்துள்ளார். உடனே அன்குஷ் தீபக்கிடம் பேசி காரை அவரே ஓட்டியதாக போலீஸில் சொல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படியே தீபக் தான் காரை ஓட்டியதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக புதிதாக கிடைக்கப்பெற்ற சிசிடிவி ஆதாரத்தில், காரை ஓட்டிய நபர் காரில் இருந்து இறங்கி வருகிறார். பின்னர் அவர் காரை சோதிக்கிறார். அதன் பின்னர் ஏற்கெனவே காத்திருந்த நபர் ஒருவர் காரில் ஏறுகிறார். பின்னர் அந்தக் கார் அங்கிருந்து புறப்படுகிறது. இதனால் விபத்து நடந்தபோது காரில் 4 பேரே இருந்தனர் என்பதும் விபத்துக்குப் பின்னர் தான் ஐந்தாவது நபர் இணைந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.