புதுடெல்லி: வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் ஜனவரி 3 முதல் 11 வரை 25-வது தேசிய உருது மொழி புத்தகங்கள் கண்காட்சி நடைபெறுகிறது. கல்லூரியை நிர்வகிக்கும் வாணியம்பாடி முஸ்லீம் கல்வி சங்கத்துடன் இணைந்து, மத்திய அரசின் தேசிய உருது வளர்ச்சிக் கவுன்சில் (என்சிபியூஎல்) இக்கண்காட்சியை நடத்துகிறது. இதன் இயக்குநர் ஷேக் அகில் அகமது, டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சத்யாவதி கல்லூரியின் உருது துறை பேராசிரியர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு முனைவர் அகில் அகமது அளித்த பேட்டியில் கூறியதாவது.
தமிழகத்தில் உருது பேசுபவர்கள் அதிகம் இல்லாத நிலையில், தென் இந்தியாவிலேயே முதல் முறையாக இங்கு உருது புத்தகங்கள் கண்காட்சி வியப்பை அளிக்கிறதே?
உருது மொழி பேசுபவர்கள் குறைவாக உள்ள இடத்தில்தான் இதுபோல் புத்தகக் கண்காட்சி நடத்த முயற்சிக்கிறோம். அப்போதுதான் உருதுவை அங்கு வளர்க்க முடியும். வாணியம்பாடி முதல் அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரு வரை உருது பேசுபவர்கள் உள்ளனர். எனவே, இந்த கண்காட்சிக்கான வரவேற்பு மிகவும் சிறப்பாக உள்ளது.
இதை நடத்த வாணியம்பாடியை தேர்வு செய்ததன் காரணம் என்ன?
சென்னையில் எங்களுடன் இணைந்து கண்காட்சியை நடத்த எவரும் கிடைக்கவில்லை. இதில், 95 ஸ்டால்களில் 55 உருது பதிப்பகங்கள் பல லட்சம் நூல்களுடன் கலந்து கொண்டுள்ளன. இங்கு நாட்டில் வெளியான அனைத்து உருது நூல்களுடன் வெளிநாடுகளில் பதிப்பானவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
உருது மொழி அறியாதவர்களுக்கு இந்த கண்காட்சியால் பலன் இல்லையே?
முற்றிலும் அறியாத தமிழர்கள் இடையே உருது மொழி மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி இது. இதன்பிறகு என்சிபியூஎல் நாடு முழுவதிலும் அமலாக்கும் உருது மொழிகல்வித் திட்டத்தில் அவர்கள் பலன் பெறலாம். முக்கியமாக இதில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட நாடு முழுவதும் சுமார் 600 கணினி மையங்கள் அமைத்து, அவற்றில் உருது, பாரசீகம் மற்றும் அரபு மொழிகளுக்கான கணினி கல்வித் திட்டம் நடத்துகிறோம். பாரசீகம் மற்றும் அரபு மொழிகளின் வளர்ச்சியும் எங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு இந்த ஆண்டு மத்திய அரசின் நிதி சுமார் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. (செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிதி வெறும் ரூ.10 கோடி)
உலகின் எத்தனை நாடுகளில் உருது ஆட்சி மொழியாக உள்ளது?
உலகின் அனைத்து நாடுகளிலும் உருது மொழி கல்வி போதிக்கப்படுகிறது. இதில், மிக அதிக ஆய்வுகளுடன் மொழியை வளர்க்கும் நாடுகளாக பிரிட்டன், ஐரோப்பா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, சீனா ஆகியவை உள்ளன.
இந்தியாவின் எத்தனை மாநிலங்களில் ஆட்சிமொழியாக உருது உள்ளது?
ஜம்மு-காஷ்மீரில் மட்டுமே உருது ஆட்சி மொழியாகி அங்கு 10-ம் வகுப்பு வரை அனைவரும் கற்பது கட்டாயம். இது, டெல்லி, ஆந்திரா, உத்தர பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் ஆட்சி மொழியான காரணத்தால் உருது மொழிக்கு இந்தியாவில் அதிக கவனம் கிடைப்பதில்லை என நிலவும் புகார் மீது உங்கள் கருத்து?
இது தவறான புகார். பாகிஸ்தானில் ஆட்சிமொழியாக இருக்கும் உருது இந்தியாவில் தாய் மொழியாக உள்ளது. இது இஸ்லாமியர்களுக்கானது அல்ல.இதை அவர்களுடன் துவக்கம் முதல்இணைத்து பார்ப்பதில் அரசியல் காரணங்கள் இருக்கலாம். ஆனால், இந்தியாவின் எந்த மொழிக்கும் எந்த மதத்துடனும் தொடர்போ, அடையாளமோ கிடையாது. ஆனால், மதங்கள்தான் ஏதாவதுஒரு மொழியுடன் தம்மை தொடர்புப்படுத்திக் கொள்கின்றன. தமிழ் உள்ளிட்டஅனைத்து மொழிகளும், மதங்களைபரப்ப இந்தியாவில் பயன்படுத்தப்பட்டன. இஸ்லாம், சீக்கியர், இந்து உள்ளிட்டவற்றின் சூபிக்கள், குருமார், ரிஷிக்கள், துறவிகள் எனப் பலரும் தம் மதங்களை பரப்ப ஆரம்பக் காலங்களில் அதிகமாக பயன்படுத்தியது உருது மொழி. இந்தியாவில் உருதுவின் வளர்ச்சி, பாகிஸ்தானை விட சிறப்பாக உள்ளது.
தென் இந்தியாவின் ஹைதராபாத்தில் தோன்றிய உருது மொழி, இங்கு வளராமல் வட மாநிலங்களில் வளர்ச்சி பெற்றது எப்படி?
இந்தியாவில் தோன்றிய மொழிகளுக்கு மட்டுமே அதன் எதிர்காலம் இங்கு பிரகாசமாக இருந்தது. அரபு உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளுக்கு அது இல்லை. ஏனெனில், வாழும் மனிதர்களின் பேச்சுமொழி மட்டுமே உயிருடன் இருந்து வளர முடியும். இச்சூழலில், முகலாய மன்னர்கள் காலத்தில் டெல்லியில் பாரசீக மொழியில் ஷெஹரி எனும் கவி அரங்குகள் நடைபெற்றன. அப்போது 1700-ல் உருது கவிஞர் முகம்மது வலி தக்ணி என்பவர் டெல்லிக்கு வந்து உருதுவில் கவி பாடினார். இதைக்கேட்டு வியந்து போன டெல்லிவாசிகள் உருது கற்க தொடங்கியதால் வளர்ந்தது.பிறகு வந்த மன்னர் அவுரங்கசீப் ஆட்சியில் உருது மொழி வேகமாக வளர்ந்தது.
தமிழகத்தில் உருது மொழியை வளர்க்க முடியுமா? இதற்காக தமிழக அரசுக்கு உங்கள் பரிந்துரைகள் என்ன?
தமிழகத்தில் உருதுவிற்கான ஒரே ஒரு அரசு பள்ளி சென்னையில் உள்ளது. இந்தியாவின் அனைத்து மொழிகளும் முக்கிய சிறப்பு பெற்றது உருது. ஒவ்வொரு மொழியிலும் பலஅறிவுக் களஞ்சியங்கள் புதைந்துள்ளன. இவற்றை நாம் கற்கும் போதுஅக்களஞ்சியங்கள் நம் சமூகக் கலாச்சரத்தை மேம்படுத்தி பாதுகாக்க உதவும்.எனவே, தமிழகத்தில் உருதுவை இனி தீவிரமாக வளர்ப்போம். நாடு முழுவதிலும் உருதுவிற்காக ஒரு சான்றிதழ் பாடத் திட்டம் நடத்தி வருகிறோம். இவற்றை எங்களுடன் இணைந்து நடத்த மத்திய அரசின் தர்பன் இணையத்தில் பதிவு செய்ய 3 ஆண்டுகள் பழமையான என்ஜிஓக்கள், பள்ளி, கல்லூரி மற்றும்பல்கலைக்கழகங்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆசிரியர்களை நாம் அமர்த்தி அவர்களுக்கு ஊதியம் அளிப்போம். இதை தமிழகத்தில்முதன்முறையாக விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்த அதன் வேந்தர் ஜி.விஸ்வநாதன் சம்மதித்துள்ளார்.
ஏற்கெனவே இந்திதிணிப்பு புகார் கொண்டுள்ள தமிழகத்தில் இனி உருதுவையும் பரப்ப, இந்த மத்திய அரசின் முயற்சி எடுபடுமா?
எந்த ஒரு மொழியாலும் மற்ற மொழிகளுக்கு இழப்பு ஏற்படும் வாய்ப்பே இல்லை. தவிர, உதவி கிடைக்கும். எனவே ஒரு புதிய மொழியை எந்த அரசாலும் திணிக்க முடியாது. தமிழகத்தில் உருதுவை வளர்ப்பதால் அதனுடன் இணைந்து தமிழ் மேலும் வளரும். குறிப்பாக, தமிழ் மட்டுமே பேசும் முஸ்லிம்களும் உருதுவை கற்றுக் கொண்டு அதை வளர்க்க வேண்டும்.