தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொழுது தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். பொய் பிரச்சாரங்களை முறியடித்து எது உண்மை என்பது நாம் மக்களுக்கு நிரூபித்து காட்ட வேண்டும். ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் பாரதத்தின் ஒரு பகுதியே தமிழகம். இதன் மூலம் தமிழ்நாடு என்ற வார்த்தையை விட தமிழகம் என்ற வார்த்தை தான் சரியான முறையில் இருக்கும் என பேசி இருந்தார்.
ஆளுநர் ஆர்.என் ரவியின் இத்தகைய பேச்சு தற்பொழுது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. தமிழக ஆளுநர் ரவிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று இந்திய அளவில் தமிழ்நாடு என்ற வார்த்தை ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதனிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் கருத்துக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் ”தமிழகத்தில் தற்போது பிரிவினைவாத கருத்துக்கள் அதிகமாக வருவதால் தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என் ராவியின் உட்பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை தனி நாடு என்று அர்த்தத்தில் கருதக்கூடாது என்பதற்காகத்தான் ஆளுநர் அவ்வாறு பேசியுள்ளார்” என விளக்கம் அளித்துள்ளார். தமிழக ஆளுநர் கூறிய கருத்துக்கு புதுச்சேரி ஆளுநர் விளக்கம் அளித்திருப்பது தற்போது பேசும் பொருளாகியுள்ளது.