சின்னமனூர்: தேனி மாவட்டத்தில் பொங்கல் தொகுப்புக்கான கரும்பு கொள்முதல் இன்று தொடங்கியது. இதற்காக கரும்பின் உயரம் 6அடி உள்ளதா என்பதை ஒவ்வொரு வயல்களுக்கும் சென்று வேளாண் துறையினர் டேப் மூலம் அளவீடு செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்காக தேனி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு பெரியகுளம் வட்டாரத்தில் 43.95 ஏக்கர், தேனி வட்டாரத்தில் 5.90 மற்றும் சின்னமனூர் வட்டாரத்தில் 56.17 ஏக்கர் என்று மொத்தம் 106ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை தற்போது மகசூல் பருவத்தில் உள்ளன. நியாய விலைக்கடைகள் மூலம் நுகர்வோர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதன்படி பொங்கல் தொகுப்புக்காக இவற்றை கொள்முதல் செய்யும் பணி சின்னமனூர் வட்டாரத்தில் இன்று தொடங்கியது. இதற்காக அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் சிட்டா, அடங்கல் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டு வேளாண்மை உதவி அலுவலர்கள் வயல்களில் களஆய்வு செய்தனர். பின்பு விவசாய கூலி தொழிலாளர்கள் மூலம் கரும்புகள் வெட்டப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. இந்த கரும்புகள் 6 அடி உள்ளதா என்பதை டேப் மூலம் அளவீடு செய்தனர். பின்பு சராசரிக்கும் குறையாத தடிமன் உள்ள கரும்புகள், நோய்தாக்காத கரும்புகள் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டு பிரித்தெடுக்கப்பட்டன.
தொடர்ந்து 10எண்ணிக்கை கொண்ட கட்டுக்களாக கட்டப்பட்டன. இவை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் லாரிகளில் ஏற்றி அந்தந்த பகுதி குடவுன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. தேனி மாவட்டத்தில் சுமார் 4 லட்சத்து 27ஆயிரம் கரும்புகள் பொங்கல் தொகுப்பில் வழங்க உள்ளதால் தேவதானப்பட்டி, தேனி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து வேளாண்துறை அலுவலர்கள் கூறுகையில், ”சின்னமனூர் பகுதி வயல்களில் ஆய்வு செய்ய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இடம்பெற்றுள்ளனர். வெட்டப்பட்ட கரும்புகளை ஆய்வு செய்து அரசு நிர்ணயித்த விதிமுறையின்படி உள்ளதா என்று சரிபார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கரும்புகள் ஒவ்வொரு வயல்களிலும் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. ஏக்கருக்கு சுமார் 5ஆயிரம் கரும்புகள் வீதம் கொள்முதல் செய்யப்பட உள்ளன” என்றனர்.
சின்னமனூரைச் சேர்ந்த விவசாயி தினேஷ் கூறுகையில், ”ஒரு கரும்பு ரூ.28க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவரை இப்படி அளந்துபார்த்து, தடிமனை சோதித்து அதிகாரிகள் கொள்முதல் செய்ததேஇல்லை. இதனால் ஏராளமான கரும்புகள் கழிக்கப்படுகின்றன. இருப்பினும் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற்றதால் விற்பனைக்காக வியாபாரிகளையே நம்பி இருக்க வேண்டிய நிலை மாறிவிட்டது. மேலும் சிலநாட்களிலே இவற்றை விற்றுவிட்டோம். மீதம் உள்ள கரும்புகளை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்காக வெட்டாமல் வைத்துள்ளோம்” என்றார்.
கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ”இந்த முறை கரும்பு கொள்முதலில் அரசு கடுமை காட்டி வருகிறது. இதனால் இடைத்தரகர்கள் இல்லாமல் அதிகாரிகள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கார்டுதாரர்களுக்கும் தரமான கரும்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர். சின்னமனூரைத் தொடர்ந்து பெரியகுளம், தேனி வட்டாரத்திலும் கரும்பு கொள்முதல் தொடங்கி உள்ளதால் கூலியாட்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. கரும்பு கொள்முதல் தொடங்கியதைத் தொடர்ந்து விவசாயிகளிடையே பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது.