‘நிரந்தர புத்தகப் பூங்கா’ – சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: “நிரந்தரமாக புத்தகப் பூங்கா அமைப்பதற்காக சென்னையில் இடம் வழங்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவிப்பு செய்தார். கடந்தாண்டு அந்த வாக்குறுதியை நானும் நினைவுப்படுத்தியிருக்கிறேன். இடம் தேர்வு செய்யப்பட்டதும் அதுதொடர்பான முறையான அறிவிப்பை நான் வெளியிடுவேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

செனனை நந்தனத்தில், 46-வது சென்னைப் புத்தகக் காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் புத்தக் காட்சி அரங்கில் அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் தொடக்க நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “புத்தக கண்காட்சிக்காக தலைவர் கருணாநிதி ரூ.1 கோடி நிதி வழங்கினார். அந்த நிதி அவருக்குப் பின்னாலும் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்த பயன்பட்டு வருகிறது.

2007-ம் ஆண்டு சென்னைப் புத்தக கண்காட்சியைத் தொடங்கி வைத்த தலைவர் கருணாநிதி, சென்னையில் மிகப் பிரம்மாண்டமான ஒரு நூலகம் அமையப்போகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதுதான் சென்னையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்.

அதேபோல் கலைஞரின் பெயரால், ரூ.114 கோடி மதிப்பீட்டில் மதுரையில் மாபெரும் நூலகம் அமைக்க இன்றைய அரசு திட்டமிட்டு, அது பிரம்மாண்டமாக எழுந்து வருகிறது. விரைவில் அது திறக்கப்பட உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக நூல்கள் நாட்டுடைமை, எழுத்தாளர் கூட்டங்கள், குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, திராவிடக் களஞ்சியம் உருவாக்கம், இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, உலகப் பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கை, நூலகங்களுக்கு சிற்றிதழ்கள், இலக்கிய மாமணி விருதுகள், உயரிய விருதுபெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம், தினந்தோறும் திராவிடம், முத்தமழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் என ஏராளமான தமிழ் காப்புத் திட்டங்களை, திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. பதிப்பகங்களுடன் போட்டிப் போடக்கூடிய அளவுக்கு தமிழ்நாடு அரசும் ஏராளமான நூல்களை வெளியிட்டு வருகிறது.

இன்று காலைகூட நூறு நூல்களை நான் வெளியிட்டேன். தமிழ்நாட்டில் நடந்த மிகப் பெரிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியாக அதுதான் இருக்கும் என்று நான் கருதுகிறேன். நிரந்தரமாக புத்தகப் பூங்கா அமைப்பதற்காக சென்னையில் இடம் வழங்கப்படும் என்று தலைவர் கருணாநிதி அறிவிப்பு செய்தார். கடந்தாண்டு அந்த வாக்குறுதியை நானும் நினைவுப்படுத்தியிருக்கிறேன். இடம் தேர்வு செய்யப்பட்டதும் அதுதொடர்பான முறையான அறிவிப்பை நான் வெளியிடுவேன்” என்று அவர் பேசினார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 46-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை (ஜன.6) தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.