கொழும்பு நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரம் மற்றும் கொலன்னாவ நகர சபைகளை மையப்படுத்தி செய்யப்பட்டுள்ள வீட்டு வேலைத் திட்டங்கள் 24 மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட வீடுகளுக்கான திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட 2 வீடுகள் ஆகியவற்றுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்குவதை அவசரப்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கினார்.
இதன்படி, இந்த வருட இறுதிக்குள் உரிமைப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையைப் பூர்த்தி செய்ய முடியும் என நகர அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் ஊடாக கொழும்பு நகரம் மற்றும் கொலன்னாவ நகர சபைப் பகுதியை மையமாகக் கொண்ட 24 வீட்டுத் திட்டங்களின் கீழ் 14,607 வீட்டுத் தொகுதிகள் பொதுமக்களின் பாவனைக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த 24 வீடமைப்புத் திட்டங்களில் 626 வீடுகளைக் கொண்ட கொம்பனித் தெரு, மெட்ரோ ஹோம்ஸ் ரெசிடென்சீஸ் வீடமைப்புத் திட்டத்திற்கும், தெமட்டகொட, மிஹிந்துசென்புர வீடமைப்புத் திட்டத்திற்கும் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளததாகவும் நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன், மெட்ரோ ஹோம்ஸ் வீடமைப்புத் திட்டத்தின் 626 வீட்டுத் தொகுதிகளில் 80 வீட்டு அலகுகளுக்கான உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய 546 வீட்டு அலகுகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கும் பணியும் நடைபெற்று வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வீட்டுத் திட்டங்களுக்கு கூட்டு ஆதன முகாமைத்துவ.அதிகாரசபையின் அனுமதியைப் பெற்ற பிறகு, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு முந்திய வீட்டுப் பயனாளிகளிடமிருந்து செலுத்த வேண்டிய 30 ஆண்டுகளுக்குள் அல்லது அதற்கு முந்தைய செலுத்த வேண்டிய தொகையை செலுத்திய பின்னர், அந்தந்த வீட்டுப் பயனாளிகளுக்குப் பத்திரங்களை வழங்கும்.
நடுத்தர வருமானம் கொண்ட வீடமைப்புத் திட்டத்தினால் நிர்மாணிக்கப்பட்ட பொரளை ஓவல் வியூ அரசாங்க ஊழியர் வீடமைப்புத் திட்டம் 608 வீட்டு அலகுகளையும் அங்கொட லேக் கிரெஸ்ட் வீடமைப்புத் திட்டம் 500 வீட்டு அலகுகளையும் கொண்டுள்ளது.
இவற்றில் அங்கொட, லேக் கிரசெட் வீடமைப்புத் திட்டத்தின் குடியிருப்புச் சான்றிதழ் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், குடியிருப்புப் பிரகடனப் பத்திரம் தயாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்பின், அந்தந்த வீட்டு பயனாளிகளுக்கு உறுதி பத்திரம் வழங்க முடியும் என நகர அபிவிருத்தி அதிகாரசபை கூறுகிறது.
அத்துடன், பொரளை, ஓவல் வியூ வீடமைப்புத் திட்டத்தின் கூட்டு ஆதன சான்றிதழும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், குடியிருப்பு உறுதிப் பத்திரங்களை பதிவு செய்வது தொடர்பான சகல பணிகளும் பூர்த்தியடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, செலுத்த வேண்டிய அனைத்துப் பணத்தையும் செலுத்தி வாங்குபவர்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவிக்கின்றது.
முனீரா அபூபக்கர்
2023.01.04