பந்தலூர் : பந்தலூர் பகுதியில் உள்ள பன்றி பண்ணைகளில் கால்நடை பராமரிப்பு துறையினர் ஆய்வு செய்தனர்.முதுமலை வனப்பகுதியில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு பன்றிகள் கொத்து கொத்தாக இறந்து வரும் நிலையில், பந்தலூர் பகுதியில் உள்ள பன்றி பண்ணைகளில் கால்நடை பராமரிப்பு துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
வனப்பகுதியில் பன்றிகளுக்கு ஏற்பட்டுள்ள பன்றி காய்ச்சல் வளர்ப்பு விலங்குகள் மற்றும் பிற விலங்குகளுக்கு ஏற்படாமல் தடுப்பதற்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பந்தலூர் அருகே அம்பலமூலா,நெலாக்கோட்டை,எருமாடு,அய்யன்கொல்லி,ஸ்ரீமதுரை போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் பன்றி பண்ணைகளில் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதா என நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் நீலவண்ணன் உத்தரவின் பேரில் கால்நடை உதவி மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
பண்ணைகளில் கிருமிநாசினி தெளித்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.பன்றிகளுக்கு நோய் தாக்கம் ஏதாவது இருந்தால் உடனடியாக பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கவேண்டும் என கால்நடை மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.