பாலிவுட்டில் இருப்பவர்கள் போதை அடிமைகளா?..எங்கள் மீதான களங்கத்தை நீக்குங்கள்! உ.பி முதல்வரிடம் நடிகர் கோரிக்கை

லக்னோ: பாலிவுட்டில் இருப்பவர்கள் போதை பொருட்களை பயன்படுத்துபவர்கள் என்ற பிம்பத்தை அகற்ற வேண்டும் என்றும், களங்கத்தை நீக்க உதவ வேண்டும் என்று நடிகர் சுனில் ஷெட்டி கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேசத்தில் திரைப்பட நகரம் கட்டுவது குறித்து ஆலோசிப்பதற்காக அம்மாநில முதல்வர்  யோகி ஆதித்யநாத், பாலிவுட் நட்சத்திரங்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி பேசுகையில், ‘பாலிவுட் திரைத்துறையில் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் போதைப்பொருட்களை உட்கொள்வதில்லை. அவர்கள் தங்களது படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்லவே கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் பாலிவுட்டில் இருப்பவர்கள் போதைப் பொருளை பயன்படுத்துபவர்கள் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த பிம்பத்தை அகற்ற வேண்டும். எங்களது மீதான களங்கத்தை நீக்க உதவ வேண்டும்; எங்களது இந்த கோரிக்கையை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும்’ என்றார்.

தொடர்ந்து பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான போனி கபூர் கூறுகையில், ‘மும்பையில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. உத்தரபிரதேசத்தை குற்றங்கள் நடைபெறாத மாநிலமாக முதல்வர் மாற்றியுள்ளதால், இங்கும் படப்பிடிப்பு நடத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. இந்த மாநிலத்தில் இரண்டு படங்களை எடுத்துள்ளேன். எதிர்காலத்தில் மேலும் பல படங்களை எடுப்பேன்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.