புவனேஸ்வர்: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி தொலை தொடர்பு சேவை வரும் ஆண்டு ஏப்ரல் முதல் தொடங்கும் என மத்திய தோலை தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2024 ஏப்ரல் முதல் பிஎஸ்என்எல் 5ஜி சேவை தொடங்கும் எனவும் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு TCS மற்றும் C-DOT ஆகியவற்றுடன் கூட்டமைப்பு மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பேசிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றே மாதங்களில் மிகப்பெரிய பரப்பளவில் 5ஜி சேவை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் சில நகரங்களில் இந்த சேவையை தந்து வருகின்றன. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட மலிவு விலையில் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக இந்த தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி சேவையில் இருந்து மாறி தற்போது 5ஜி சேவையை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் இன்னும் 4ஜி சேவையைக் கூட வழங்கவில்லை. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் 2024-ம் ஆண்டில் தனது சொந்த 5ஜி சேவையை மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்ய உள்ளதாக ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.