"பிராமணர்களை எதிரிகளாக சித்தரிப்பது தவறு; ஆனால்…"- விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

“இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை எப்படி குறிப்பிட்டு எதிரிகளாக சித்தரிப்பது தவறோ அதேபோல, பிராமணர்களை எதிர்ப்பதும் தவறு. நாம் பார்ப்பனியத்தை மட்டுமே எதிர்க்கிறோம். ஏனென்றால் அதுதான் சனாதனம் பக்கம் நிற்கிறது” என்று சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவொன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசியுள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பாக புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் `சமகாலத் தலைவர்கள், சாதியை எதிர்த்துப் போராடியவர்கள் அம்பேத்கரும் பெரியாரும்’ என்று தெரிவித்தார்.
image
மேலும் பேசுகையில், “அம்பேத்கர் தேசிய அளவில் பெரும் சமூகத்தின் அடையாளமாக இருக்கிறார். அவர்கள் அம்பேத்கரை தங்கள் மீட்பராக பார்க்கிறார்கள். அம்பேத்கரை பகைத்தால் தலித் மற்றும் பழங்குடி மக்கள் மதம் மாறிவிடுவார்கள் என்பதால் செயல் தந்திரமாக அம்பேத்கரை தன் வயப்படுத்த முயல்கிறார்கள். ஆனால் பெரியாரை தங்களின் எதிரியாக தொடர்ந்து முன்னிறுத்துகிறார்கள்.
சனாதன சக்திகள் இன்று அதிகாரம் கையிலிருப்பதால் கொட்டமடிக்கிறார்கள். 70 ஆண்டுகளில் நடந்த மாற்றங்களை இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எந்த மாற்றமும் இங்கு நிகழ்ந்துவிடவில்லை. சிறிய நெகிழ்வு தான் நடந்திருக்கிறது. ஏற்றத்தாழ்வு அப்படியே தான் இருக்கிறது. ஆனால் நெகிழ்வைக் கூட இவர்களால் சகிக்க முடியவில்லை.
image
75 ஆண்டுகளில் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் எத்தனை தலித்துகள், எத்தனை பழங்குடிகள், எத்தனை பிற்படுத்தப்பட்டோர் வந்திருக்கிறார்கள்? Forward caste தவிர இன்னும் யாரும் பதவிக்கு வரமுடியவில்லையே ஏன்?
பெரியாரின் போராட்டங்களும் அம்பேத்கரின் போராட்டங்களும் பார்ப்பனர்களை தனிமைப்படுத்துவதாக இருந்தன. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் என பிரித்தால் தான் அவர்களை அதிகாரம் அற்றவர்களாக மாற்ற முடியும் என கன்ஷி ராம் உள்ளிட்ட தலைவர்கள் செயல்பட்டனர். ஆனால் பார்ப்பனர்கள் விழித்துக் கொண்டார்கள். இந்து என்ற அடையாளத்தில் பிற்படுத்தப்பட்டோரையும், தலித்துகளையும் பார்ப்பனர்கள் திட்டமிட்டு இணைத்துக் கொண்டார்கள். 
image
நம் மக்களுக்கு இந்து வேறு, இந்துத்துவா வேறு என்று புரிய வைப்பதில் தான் இன்று நம் முன் இருக்கும் பெரிய சவால். எங்கே மனுஷ்மிருதி இருக்கிறது என்கிறார்கள். சுமார் 60 வகை பிராமணர் சாதிகள் இருக்கின்றன. பிராமணர் என்ற ஒற்றை அடையாளத்தோடு பல உட்பிரிவுகளைக் கொண்டு அவர்கள் செயல்படுகிறார்கள்.
இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை எப்படி எதிரிகளாக சித்தரிப்பது தவறோ அதே போல, பிராமணர்களை எதிர்ப்பதும் தவறு. நாம் பார்ப்பனியத்தை மட்டுமே எதிர்க்கிறோம். ஏனென்றால் அது சனாதனம் பக்கம் நிற்கிறது என்பதால் மடுமே.
image
30 கோடி தலித்கள், தலித் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் அணி திரள்வதை பார்ப்பனியம் விரும்புவதில்லை. ஒவ்வொரு சாதியும் ஒரு தனி அடையாளத்தோடு இருக்க வேண்டும் என திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். யாரும் ஓபிசியாகவோ, தலித்தாகவோ அணி திரள்வதை பார்ப்பனியம் விரும்பவில்லை. சாதி உணர்வை மற்ற அனைவரிடமும் வளர்க்கிறார்கள். சாதி பெருமிதம் இருந்தால் தான் பார்ப்பனியம் கோலோச்சும். தமிழ்தேசியம் என்ற பெயரில்  இங்கு  சாதியை தூக்கிப்பிடிக்கிறார்கள். இது பெரிய கருத்தியல் பிழை. மாபெரும் தவறு இது. சமஸ்கிருதமயமாதலை திராவிடர் கழகம் செய்கிறதா?  இந்திய தேசியம் செய்கிறதா? நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?
அம்பேத்கர் அரசியலும் திராவிட அரசியல் தான். இந்தியா முழுவதும் பரவியிருந்தது திராவிட நாகரிகம் என்று ஏற்றுக்கொண்டவர் அம்பேத்கர். திராவிட அரசியல் எதிர்ப்பு என்பது பார்ப்பனியத்திற்கு துணை போவது. தமிழகத்தை பொறுத்தவரை அம்பேத்கரும் பெரியாரும் முன் இருப்பதை விட இப்போது பெரிதும் தேவைப்படுகிறார்கள்.
image
ஈழம் தொடர்பாகவும்,  நீட் விஷயத்திலும் திமுக இன்னும் சாதிக்கவில்லை என விமர்சிக்கலாம்.  ஆனால் திராவிட அரசியலை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் பெரியாரை தெலுங்கராகவும்,  அம்பேத்கரை மராட்டியராகவும், மார்க்ஸை வெளிநாட்டவராகவும் எப்படிப் பார்க்க முடியும்?” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.