கர்நாடக மாநிலம், பெங்களூர் அருகே அத்திப்பள்ளி பகுதி உள்ளது. இப்பகுதி, தமிழக மாநில எல்லையான ஒசூர் அருகே அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் சிலர், கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டு, அசல் ரூபாய் நோட்டுகளாக மாற்றி வருவதாக, மத்திய குற்றப்புலனாய்வுத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
மத்திய குற்ற புலனாய்வுத்துறை மற்றும் பொருளாதார குற்றத் தடுப்புப்பிரிவு போலீஸார் இணைந்து கடந்த, 31-ம் தேதி சோதனை செய்ததில், கள்ள நோட்டுகள் அச்சிட்டது கண்டறியப்பட்டு, திருநெல்வேலியைச் சேர்ந்த சுப்ரமணியன் (60), பிச்சிமுத்து (48) ஆகியோரைக் கைதுசெய்து விசாரித்து வந்தனர். முக்கிய குற்றவாளியான நல்லகனியை (53) தேடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று, நல்லகனியை (53) கைதுசெய்த போலீஸார், 31-ம் தேதி முதல் இன்று வரை இவர்களிடமிருந்து, 1,28,68,000 ரூபாய்க்கான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய போலீஸார், “கைதான குற்றவாளிகள் இந்த கள்ள நோட்டுகளை தாங்களே அச்சிட்டு பெங்களூர் பகுதியில் புழக்கத்தில்விட்டு, அசல் நோட்டுகளாக மாற்றி வந்திருக்கின்றனர். கைதானபோது, இந்த நோட்டுகளை சினிமா படப்பிடிப்புக்காக தயாரித்ததாக பொய் சொல்லினர். விசாரணையில் குற்றம் கண்டறியப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், மேலும், யாரேனும் இவர்களுடன் குற்றத்தில் ஈடுபட்டார்களா என விசாரிக்கிறோம்’’ எனத் தெரிவித்தனர்.