புதுப்பேட்டை, ஆயுதப்படை வளாகத்தில் சென்னை பெருநகர காவலர், பல்பொருள் அங்காடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கியின் இயக்கத்தையும், தொடுதிரை வசதி, (KIOSK), ஆன்லைன் கட்டண வசதி ஆகியவற்றை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ். மற்றும் தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநர் சைலேஷ்குமார் யாதவ் ஐ.பி.எஸ். ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு, கடந்த ஒரு ஆண்டில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவும், அனைத்து காவல்துறையினரின் கடும் உழைப்பில் தமிழ்நாட்டில் அமைதி நிலை நிறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஒரு ஆண்டில் 250 காவல்துறையினர் பணியின் போது உயிரிழந்துள்ளதாகவும் அவர்களிம் குடும்ப உறுப்பினர்களுக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இரவு ரோந்து செல்லும் காவலர்களுக்கு சிறப்பு படி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது காவலர்கள் மத்தியில் புத்துணர்வை ஏற்படுத்திகிறது எனவும் பேசினார்.
போதை பொருள் கடத்தலை கட்டுபடுத்த தமிழக காவல்துறை மிகசிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், கஞ்சா வேட்டை 1.0, 2.0, 3.0 போன்ற திட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறதாகவும் மேலும், வெளி நாடுகளிலிருந்து போதை பொருள் கடத்தலை தடுக்க பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
விருகம்பாக்கம் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகளை கைது செய்வதற்கு ஏன் தாமதம் செய்யப்பட்டது? பல்வேறு கட்சியைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் கருத்துக்குப் பிறகு நடவடிக்கை எடுத்தது ஏன்? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த டிஜிபி சைலேந்திரபாபு,
யாருடைய கருத்துக்கு பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை, பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் விசாரணை நடத்தப்பட்டதாகவும் வேண்டுமென்றால் எஃப் ஐ ஆர் காப்பியை வாங்கி உறுதி செய்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.