பேச்சு வாக்குல அடிச்சி விட்டேன்.. மன்னிப்பு கேட்ட டாக்டர் ஷர்மிகா..!

யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூல் என எந்த பக்கம் போனாலும் சித்த மருத்துவ குறிப்புகளை பேசும் டாக்டர் ஷர்மிகாவின் வீடியோ தான் ஓடி கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இவர் பிரபல யூடியூப் சேனலில் தேவையான மற்றும் மிக எளிமையான மருத்துவ குறிப்புகளை பற்றி பேசி வந்ததால் சீக்கிரமாகவே பிரபலமானார்.

பொதுமக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளை குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் பேசி வரும் டாக்டர் ஷர்மிகாவின் வீடியோக்களை நெட்டிசன்கள் தேடி தேடி சென்று பார்த்து வருகின்றனர். எல்லாமும் நன்றாக போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான் இவர் மாட்டு கறியை சாப்பிடக்கூடாது, அது ஒரு குல தெய்வம். நம்மை விட பெருசாக இருக்கும் விலங்குகளை நாம் சாப்பிட்டால் செரிக்காது, அதனால் உடல் பாதிக்கப்படும் என்று மத ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் கலந்து பேசினார்.

பொதுவாக மாட்டிறைச்சி மட்டுமல்லாமல் எந்த உணவாக இருந்தாலும் அது அவரவர் உடல் பிரச்சினைகளை பொறுத்துதான் மருத்துவர்களே தங்களது நோயாளிகளுக்கு பரிந்துரை செய்வார்கள். ஆனால், டாக்டர் ஷர்மிகா மாட்டு கறியை சாப்பிடக்கூடாது என்று பொதுவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், இவர் பாஜக நிர்வாகியான டெய்சி சரணின் மகள் என்பதால் மாட்டு கறி பேச்சுக்கு எதிர்ப்புகளும், விமர்சனங்களும் அதிகமாகின. இன்று வரை இவரது பேச்சை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். டாக்டர் ஷர்மிகா அதை கண்டித்து பேசிய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், டாக்டர் ஷர்மிகா அண்மையில் ஒரு வீடியோவில் பேசியபோது, கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டால் டெங்கு, மலேரியா வரும் என்றும் குளோப் ஜாமுன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும் என்றும் கூறியிருந்தார். இதனால், சம்மந்தமே இல்லாமல் பேசி மக்களை தவறாக வழிநடத்துவதாக ஷர்மிகாவுக்கு மருத்துவர்களே கண்டனம் தெரிவித்து வந்தனர்.

மேலும், சித்த மருத்துவத்தில் மாட்டுக்கறி பற்றி இல்லை என்றும் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று குறிப்பிடவில்லை என்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குனர் பார்த்திபன் தெரிவித்தார். அத்துடன் டாக்டர் ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், டாக்டர் ஷர்மிகா டெங்கு, மலேரியா மற்றும் குலாப் ஜாமுன் குறித்து ஒரு ஃப்லோவில் பேசியதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்டும் தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.