நெல்லை: நெல்லையில் புதுமண தம்பதிகளுக்கு தலைபொங்கல்படி வழங்க பஞ்ச வர்ண பானைகள், அடுப்பு கட்டிகள் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மண்பாண்ட பொருட்கள் முக்கிய பங்கு வகிப்பதால் மண்பாண்ட பொருட்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையின் போது பழங்கால தமிழர்கள் கலாச்சாரத்தின்படி அடுப்பு கட்டிககளை கூட்டி மண் பானைகளை வைத்து பனை ஓலைகள் மூலம் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படைத்து மகிழ்ந்துள்ளனர்.
காலபோக்கில் மண்பானைகளில் பொங்கலிடும் வழக்கம் கிராம பகுதிகளில் மட்டுமே தற்போது வரை புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் காலநிலை மாற்றத்தின் காரணமாக நகர் பகுதிகளில் கூட தற்போது மண்பாண்டங்கள் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. மண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில், குடிநீர் ஊற்றி வைக்க பயன்படுத்தப்படும் ஜாடிகள், ஆப்ப சட்டி, டீ டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மவுசு கூடியுள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் என்பதால் மண்பாண்ட சமையல் பாத்திரங்களை பொதுமக்கள் வேண்டி விரும்பி வாங்கிச் செல்கின்றனர். கிராமத்தில் மட்டும் நடைமுறையில் இருந்து வந்த புதுமண தம்பதிகளுக்கு தலை பொங்கல்படிக்கு பஞ்ச வர்ண பானைகள் வழங்கும் நடைமுறை, தற்போது நகர்புறத்திலும் காணப்படுகிறது. இதுபோல் திருமண வைபவங்களில் கூட பஞ்ச வர்ண பானைகள் முன்வரிசையில் அழகு படுத்தி வைக்கப்படும் கலாச்சரம் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 9 நாட்கள் உள்ளது. புதுமண தம்பதிகளுக்காக தலைபொங்கப்படி கொடுக்க வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலை, திருச்செந்தூர் சாலையில் சட்டக்கல்லூரி எதிர்புறம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக பஞ்ச வர்ண பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து பாளை அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி ஆதிமூலம் (45) கூறுகையில்; கடந்த நான்கு தலைமுறையாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.
மண்பாண்ட பொருட்கள் செய்ய களிமண் அள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி மண்ணை அள்ளி சேமித்து வைத்து குழைத்து மண்பாண்ட பொருட்கள் செய்ய பயன்படுத்துவோம். பொங்கல் பண்டிகையின் தலைபொங்கப்படி கொடுக்க பஞ்ச வர்ண பானைகளை 15 நாட்களுக்கு முன்பாக பொதுமக்கள் செய்து கேட்பார்கள். அதன்படி பனைகளை செய்து சூளையில் வேகவைத்து எடுக்கப்பட்ட பின் பஞ்ச வர்ணம் பூசி எடுத்து வைத்திருக்கிறோம். பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பாக ஆடர் கொடுத்தவர்கள் பானைகளை வாங்கிச் சென்று தலைப்பொங்கப்படிக்கு பிற சீதனங்களுடன் கொடுப்பார்கள்.
உடல் ஆரோக்கியத்திற்காக பொதுமக்கள் மீண்டும் மண்பானை சமையலை விரும்புவதால் தற்போது மண்பாண்ட குடிநீர் பாட்டில், டம்ளர், குடிநீர் ஜாடி மற்றும் சமையல் பொருட்களுக்கு கூட மவுசு அதிகரித்துள்ளது. சாதா பானை ரூ. 500, பஞ்ச வர்ண பானை ரூ.800, பொங்கல் அடுப்புகள் மூன்று கட்டி ரூ.200, ரூ.150 என மூன்று மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. மண்பாண்ட தொழிலில் இஷ்டப்பட்டு பொருட்களை கஷ்டப்பட்டு செய்து பாதுகாப்பாக விற்பனைக்கு கொண்டுவந்தாலும் குறிப்பட்ட விலைக்கு விற்பனை செய்வதில்லை. பொதுமக்களும் விலையை குறைத்துதான் வாங்கி செல்வதாக அவர் தெரிவித்தார்.