பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் முக்கிய கட்டுப்பாடு ஒன்றை கிருஷ்ணகிரி மாவட்டஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி அறிவித்துள்ளார்.
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் ஆகியோருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், ஒரு முழு கரும்பு, ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில் தற்போது வீடுகளுக்கு நேரடியாக சென்று டோக்கம் கொடுக்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி 2023ஆம் ஆண்டு தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 1,058 ரேஷன் கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நடத்தும் 36 ரேஷன் கடைகள் என மொத்தம் 1,094 ரேஷன் கடைகளில் உள்ள அனைத்து அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் 5 லட்சத்து 58 ஆயிரத்து 934 பேர் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 338 ரேஷன்கார்டுதாரர்கள் என மொத்தம் 5 லட்சத்து 59 ஆயிரத்து 272 ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு பன்னீர் கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப்பணம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதி முதல் 13ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணம் பெற ஏதுவாக ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் தொடர்புடைய ரேஷன்கடை விற்பனையாளர்கள் மூலமாக ரேஷன்கார்டுதாரர்களுக்கு, அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன் வருகிற 8ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
இந்த பரிசு தொகுப்பு பொருட்களை பெற டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்திற்கு தங்களுக்குரிய ரேஷன் கடைகளில் முக கவசம் அணிந்து வந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.