சென்னை: அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டு தற்போது 100 நாட்கள் கடந்துவிட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 16-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையின் கீழ் திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள 37 பள்ளிகளில் முதற்கட்டமாக இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 5,148 மாணவர்கள் காலை உணவு வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்காக 6 இடங்களில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைக்கப்பட்டது. எண்ணூரில் இரண்டு இடங்கள், மாதவரம், கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, ராயபுரம் ஆகிய ஆறு இடங்களில் உள்ள ஒருங்கிணைந்த சமையல் கூடம் மூலம் தற்போது உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த 100 நாட்களில் இந்தத் திட்டம் எவ்வாறு செயல்பட்டு வருகிறது. தற்போது எந்த மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்பதை கண்டறிய சென்னை மாநகராட்சியில் உள்ள சில பள்ளிகளுக்கு விசிட் அடித்து, திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகளிடம் பேசினோம்.
வெறுப்பும், விருப்பமும்: காலை உணவுத் திட்டத்தில் செவ்வாய்க்கிழமை சோள காய்கறி கிச்சடி வழங்கப்பட்டு வந்தது. தொடக்கத்தில் குழந்தைகள் பலர் இந்த கிச்சடியை விரும்பி உண்ணவில்லை. பல குழந்தைகள் பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால், சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கொஞ்சம் கொஞ்சம் குழந்தைகளைப் பழக்கி சோள காய்கறி கிச்சடியை சாப்பிட வைத்துள்ளனர். தற்போது குழந்தைகள் இதை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
பெரியதில் இருந்து சிறியது: தொடக்கத்தில் சாம்பார் மற்றும் கிச்சடியில் காய்கறியை பெரிதாக வெட்டி போட்டு உணவு தயார் செய்யப்பட்டது. இதனால் குழந்தைகள் பலர் காய்கறியை உண்ணாமல் தட்டில் ஒதுக்கி வைத்துவிட்டனர். இதன்பிறகு மிகவும் சிறிதாக காய்கறியை வெட்டி கிச்சடி மற்றும் சாம்பாரில் போட்டு சமையல் செய்தோம். இதன் காரணமாக தற்போது குழந்தைகள் காய்கறியை ஒதுக்காமல் உண்டு வருகின்றனர்.
மெனுவை முடிவு செய்யம் மேலாண்மை குழு: தமிழக அரசு அளித்துள்ள உணவு பட்டியலில் ஒவ்வொரு வாரமும் என்ன உணவு வழங்க வேண்டும் என்று பள்ளி மேலாண்மை குழுவினர்தான் முடிவு செய்கின்றனர். இதன்படி உணவு தயார் செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தை தினசரி செயல்பாடுகளை பள்ளி மேலாண்மைக் குழு முழுமையாக கண்காணித்து வருகிறது.
வாரம் தோறும் ஆய்வு: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை இந்தத் திட்டம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் கடந்த வாரம் தினசரி எத்தனை குழந்தைகள் உணவு சாப்பிட்டனர், இந்த வாரம் எவ்வளவு பேருக்கு தயார் செய்ய வேண்டும் என்று விரிவான ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், ஏதாவது ஒரு பகுதியில் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து இருந்தால், அதற்கான காரணமும் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சரசாரியின் அடிப்படையில் உணவு: பள்ளிகளில் ஒரு சில காரணங்களுக்காக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து உணவு வீணாவதை தடுக்க சரசாரி அடிப்படையில் உணவு தயார் செய்யப்படுகிறது. ஆதாவது, கடந்த மாதம் தினசரி எவ்வளவு குழுந்தைகள் சாப்பிட்டுள்ளனர் என்பது கணக்கீடு செய்யப்பட்டு, அதில் இருந்து 10 முதல் 15 சதவீதம் அதிமாக கணக்கீடு செய்யப்பட்டு உணவு தயார் செய்யப்படுகிறது. இதன் காரணமாக உணவு வீணாவது குறைக்கப்படுகிறது. அனைவருக்கும் தேவையான உணவு வழங்கப்படுகிறது.
கடந்த 100 நாட்களில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இந்த செயல்பட்டு வரும் காரணத்தால் கூடுதலாக ஒரு பள்ளியை இணைக்க முடிவு செய்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.