உதய்பூர்: “அதிகாரம் என் கைகளில் இருந்திருந்தால் வன்புணர்வில் ஈடுபடுபவர்களுக்கும், குண்டர்களுக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கும் நடைமுறைகளை கொண்டு வந்திருப்பேன்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் வியாழக்கிழமை உதய்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், மாநிலத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவின் தலைவர், புதன்கிழமை பிறப்பித்த புதிய உத்தரவு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அசோக் கெலாட் அளித்த பதிலில், “தேவைப்பட்டால் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில், லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்படும் ஊழல்வாதிகளின் அடையாளம் வெளியிடப்படும். அது எனது கைகளில் இருந்திருந்தால், வன்புணர்வில் ஈடுபடுபவகளையும், குண்டர்களையும் மக்களுக்கு அடையாளம் காட்டும் வகையில் பொதுவெளியில் ஊர்வலமாக இழுத்துவரச் செய்வேன். ஆனால் அப்படி செய்ய முடியாது. கைகளில் விலங்கிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடைசெய்துள்ளது. கைகளில் விலங்கிடப்படும் போது அது அவர்களின் குற்றத்தை உணரச்செய்யும்.
நீதித்துறையை மதிப்பது நாம் அனைவரின் கடமை. நீதித்துறை அதன் கடமையைச் செய்கிறது. நாங்கள் எங்கள் கடமைகளைச் செய்கிறோம். மதிப்பளிப்பது நமது கடமை. ஊழலை இல்லாமல் பண்ணுவதே அரசாங்கத்தின் நோக்கம். அதனால் ஊடகங்களும் பொதுமக்களும் அதனைப்பெரிபடுத்தவேண்டாம்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி சில நடைமுறைக் காரணங்களுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என நான் நம்புகிறேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வேறு சில காரணங்களுக்காக இருக்கலாம் என ஊடகங்களில் வந்துள்ளது. அது ஆய்வு செய்யப்படும். தேவைப்பட்டால் அந்த உத்தரவு திரும்பப் பெறப்படும். அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை” என்று கூறினார்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் சமீபத்திய இந்த உத்தரவை விமர்சித்துள்ள மாநில எதிர்கட்சியான பாஜக, இதன் உள்நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து பதிலளித்த அசோக் கெலாட், “லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பாக செயல்படுகிறது. பாஜக தலைவர்கள் ஒருபோதும் நல்லதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்றார்.
முன்னதாக, லஞ்ச ஒழிப்பு புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்படும் வரை அவர்களின் பெயர், புகைப்படங்களை வெளியே சொல்லக்கூடாது என்று ராஜஸ்தான் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு புதன்கிழமை உத்தரவிட்டிருந்தது.
மாநிலத்தின் லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஹேமந்த் பிரியதர்ஷி, லஞ்ச புகாரில் குற்றம் சாட்டப்பட்டவரின் பதவி, பொறுப்பு, துறைகள் குறித்த தகவல்களை மட்டுமே ஊடங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி பிறப்பிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.