புதுச்சேரி: புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கல் தொடர்பான Dawn to Dark (வெளிச்சத்தில் இருந்து இருளுக்கு) என்ற ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டிலில் இன்று இரவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆவணப்படத்தை வெளியிட்டார். அதனை புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் ஜி. ராமகிருஷ்ணன் பேசியதாவது: ‘‘புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு மின்துறையை தனியாருக்கு விற்பதற்கு முடிவெடுத்தபோது மகத்தான போராட்டம் வெடித்தது. பொறியாளர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தேசத்து மக்கள் மிகப்பெரிய சவாலை சந்திப்பது மட்டுமல்ல, புதுச்சேரி மக்களும் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளக்கூடிய சூழலில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். மத்தியிலும் பாஜக ஆட்சி. புதுச்சேரி மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இந்தியாவிலேயே ரேஷன் கடைகளை மூடி, திறக்க முடியாது என்று சொல்லக்கூடிய மாநிலமாக புதுச்சேரி திகழ்ந்துகொண்டிருக்கிறது. அடுத்து மின்துறையை தனியாருக்கு விற்க முடிவெடுத்து மகத்தான போராட்டத்துக்கு பிறகும் கூட வருகின்ற 9-ம் தேதி டெண்டரை ஓபன் செய்ய இருக்கிறது இந்த அரசு. புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்பட்டால், புதுச்சேரி பிரதேசத்தின் தொழில் வளர்ச்சி பாதிப்பதோடு மட்டுமின்றி, ஏழை எளிய மக்களின் அன்றாட மின் இணைப்பு போன்றவை கடுமையாக பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும்.
மக்கள் தொகை அதிகமுள்ள உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்தாண்டு மின்துறையை தனியாருக்கு விற்பது என்று முடிவெடுத்து அரசு அறிவித்த நிலையில், பொறியாளர்கள், ஊழியர்கள் ஒன்றுபட்டு போராட்டம் நடத்தியனர். அப்போது போராட்டக்காரர்களுக்கு முன்பு முதல்வர் யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்டு, மின்துறை தனியார் மயமாக்கும் அறிவிப்பை வாபஸ் பெற்றார்.
சண்டிகரிலும் மின்துறை தனியார் மயம் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு பாஜக ஆட்சி நடத்தும் மகாராஷ்டிராவில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 86 ஆயிரம் பொறியாளர்கள், தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராட்டம் நடத்தினர். அதன்பிறகு மகாராஷ்டிரா அரசு அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் மகத்தான போராட்டத்துக்கு பிறகும், போராட்டத்தை எதிர்கட்சிகள் ஆதரித்த பிறகும் கூட மின்துறையை தனியார் மயமாக மாற்றியே தீருவோம் என்று முடிவெடுத்து டெண்டர் ஓபன் செய்ய உள்ளனர். இது ஒட்டுமொத்த புதுச்சேரியையும் பாதிக்கும்.
மின்துறை தனியார் மயமாக்குவோம் என்று அரசின் முடிவை எதிர்த்து மக்களிடம் கொண்டு செல்லவே இந்த ஆவணப்படத்தை வெளியிடுகிறோம். புதுச்சேரி மாநிலத்தை பாஜக பரிசோதனை கூடமாக பயன்படுத்துகிறார்கள். மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தை அட்சயபாத்ரா என்ற தனியாருக்கு அளித்தார்கள். இப்போது மின்துறையை தனியார் மயமாக்க முடிவெடுத்துள்ளனர். எனவே மின்துறையை பாதுகாப்போம், தனியாருக்கு அனுமதிக்கமாட்டோம் என எதிர்கட்சிகள் இணைந்து, ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி மகத்தான போராட்டத்தை நடத்தி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜகவின் இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும்.’’ என்றார். தொடர்ந்து ஆவணப்படம் திரையிடப்பட்டது. கருத்துரையாடல் நிகழ்வும் நடைபெற்றது.