மோடி ஆட்சியில் இரண்டு இந்தியா: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பானிபட்: பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் ஏழை, பணக்காரர்கள் என இரண்டு இந்தியா இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று அரியானா மாநிலம் பானிபட்டில்  நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மோடி தலைமையிலான ஆட்சியில் இரண்டு இந்தியா உள்ளது.  அதில், ஒன்றில்  தொழிலாளர்கள், விவசாயிகள், வேலையில்லா இளைஞர்கள் உள்ளனர்.

இன்னொன்றில் நாட்டின் பாதி வளத்தை வைத்துள்ள 100 தொழிலதிபர்கள் இருக்கின்றனர். இந்தியாவில்  உள்ள அனைத்து  கம்பெனிகளின் லாபத்தை எடுத்து பார்த்தால் அதில் 90 சதவீதத்தை 20 நிறுவனங்கள் வைத்துள்ளன. சாதாரண குடிமகன்களுக்கு  எதுவும் இல்லை.நாட்டின் செல்வங்கள் அனைத்தும் 200 அல்லது 300 பேரிடமே உள்ளது. இது தான் மோடி ஆட்சியின் உண்மையான நிலை.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை சீரழிப்பதற்கு கொண்டு வரப்பட்ட ஆயுதம் ஜிஎஸ்டி. இந்த ஜிஎஸ்டி கொண்டுவரப்படுவதற்கு முன் பானிபட்டில்  ஆயிரக்கணக்கான சிறு,நடுத்தர கம்பெனிகள் இருந்தன. இதன் மூலம் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்றனர்.ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவை அரசின் கொள்கைகள் அல்ல, சிறு, குறு தொழிலை அழித்த ஆயுதங்கள்’’ என குற்றம் சாட்டினார்.

வேலை இல்லா பிரச்னை: பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ்  தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில்,‘‘ நாட்டில் 45 ஆண்டுகளில் இதுவரை  இல்லாத அளவு வேலையில்லா பிரச்னை  அதிகரித்து உள்ளது.  இன்ஜினியர்,டாக்டருக்கு படித்தவர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். ஆனால்,  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இதை பற்றி கவலைப்படுவது  இல்லை. சாதாரண மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாதநிலையில் உள்ளனர்.  பணவீக்கத்தினால் இந்த நிலைமை  ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

மருத்துவமனையில் சோனியாவை சந்தித்தார்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த புதன்கிழமை டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சோனியா காந்தி சுவாச கோளாறில் இருந்து குணமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வௌியிட்டுள்ளது. அரியானாவில் இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி நேற்று காலை டெல்லி வந்து சோனியாவை சந்தித்து நலம் விசாரித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.