புதுடில்லி, உத்தரகண்ட் மாநிலத்தில், ரயில்வேக்கு சொந்தமான 29 ஏக்கர் நிலத்தில் வசித்து வரும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை உடனடியாக காலி செய்யும்படி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள நைனிடால் மாவட்டம் ஹல்த்வானி என்ற இடத்தில் ரயில்வேக்கு சொந்தமான 29 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி 4,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன.
வீடுகளை தவிர நான்கு அரசு பள்ளிகள், 11 தனியார் பள்ளிகள், ஒரு வங்கி, இரண்டு பிரமாண்ட குடிநீர் சேமிப்பு தொட்டிகள், 10 மசூதிகள், நான்கு கோவில்கள் மற்றும் ஏராளமாக கடைகள் அந்த பகுதியில் உள்ளன.
இந்த இடத்தை காலி செய்யும்படி ரயில்வே நிர்வாகம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் மக்கள் செவி சாய்க்கவில்லை.
இதை தொடர்ந்து, ரயில்வே நிலத்தை காலி செய்ய வலியுறுத்தி, உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் ரயில்வே நிர்வாகம் வழக்கு தொடுத்தது.
பல ஆண்டுகளாக நடந்த வழக்கின் இறுதியில், கடந்த மாதம் 20ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், ரயில்வே நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக காலி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அங்கு கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு:
பல ஆண்டுகளாக அந்த இடத்தில் வசித்து வரும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ஒரே இரவில் அப்புறப்படுத்துவது தவறு. இது மனிதாபிமானம் சம்பந்தப்பட்ட விவகாரம்.
எனவே, இதற்கு நியாயமான தீர்வு காண வேண்டும். இந்த வழக்கு அடுத்த மாதம் மீண்டும் விசாரிக்கப்படும். அதுவரை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசும், ரயில்வே நிர்வாகமும் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்