ரூ.20 கோடி கொடுத்து ’நாய்’ வாங்கிய பெங்களூரு தொழிலதிபர்! அப்படி என்ன ஸ்பெஷல்!

பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ. 20 கோடி கொடுத்து நாய் ஒன்றை வாங்கியிருப்பதுதான் தற்போதைய பேசுபொருளாக உள்ளது.
வீட்டு விலங்குகளை வளர்ப்பதில் பலருக்கு அலாதி பிரியம் உண்டு. அதில் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான சதீஷ், அதிக நாய்களை வாங்கி வளர்த்து வருகிறார். அதிலும் அவர் சமீபத்தில் 20 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கியிருப்பதுதான் பேசுபொருளாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடபோம்ஸ் கென்னல்ஸ் என்ற பெயரில் நாய் விற்பனை கடை வைத்திருக்கிறார், சதீஷ். இவர், இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். இவர், ஹைதராபாத்தில் உள்ள நாய் விற்பனையாளரிடம் இருந்து ’காகேசியன் ஷெப்பர்டு’ என்ற இன நாயை ரூ.20 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். ஒன்றரை வயதுடைய அந்த நாய்க்கு ‘கடபோம் ஹைடர்’ என பெயர் சூட்டியுள்ள அவர், அந்த நாய்க்காக அவரது வீட்டில் தனியாக குளிரூட்டப்பட்ட அறை ஒன்றையும் ஒதுக்கியுள்ளார் என்பதுதான் சிறப்பான தகவல்.
image
ஏன் இந்த வகை நாய்க்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்றால், இவ்வகை நாய் துருக்கி, சிர்கசியா, ஜார்ஜியா, அஜர்பைஜான், ஒசேஷியா, தாகெஸ்தான் போன்ற நாடுகளில் மட்டும்தான் காணப்படுகிறதாம். இந்த வகை நாய் இந்தியாவில் காணப்படுவது மிகவும் அரிது எனச் சொல்லப்படுகிறது. மேலும், காகேசியன் ஷெப்பர்டு இன நாய்கள் 10 முதல் 12 ஆண்டுகள் உயிர்வாழக் கூடியவை ஆகும். இதன் சராசரி உயரம் 23-30 அங்குலம் வரையிலும், அதன் எடை 45 முதல் 77 கிலோ வரையிலும் இருக்குமாம்.
ரூ.20 கோடி கொடுத்து காகேசியின் ஷெப்பர்டு இன நாயை வாங்கியிருப்பது குறித்து, “இந்த கடபோம் ஹைடர், திருவனந்தபுரத்தில் நடந்த நாய் கண்காட்சியில் 32 பதக்கங்களை வென்றுள்ளது.  கடபோம் ஹைடர் அனைவருடனும் பாசத்துடன் பழகி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
image
தொழிலதிபர் சதீஷ், விலையுயர்ந்த இன நாய்களை வாங்கி வளர்த்து வருகிறார், சதீஷ். இந்த இன நாய் தவிர இன்னும் பல இன நாய்களையும் அவர் வளர்த்து வருகிறார். இந்தியாவிலேயே இரண்டு கொரியாவைச் சேர்ந்த தோசா மஸ்திப் இன நாய்களை வைத்திருந்த முதல் நபர் சதீஷ்தான். அதன் விலை ரூ. தலா 1 கோடி. அதுமட்டுமின்றி,  இவர் ஏற்கெனவே, திபெத்தியன் மஸ்திப் இன அரிய வகை நாயை ரூ.10 கோடிக்கும், அலஸ்கன் மலமுடே இன அரிய வகை நாயை ரூ.8 கோடிக்கும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் வைத்திருக்கும் நாய் இனங்களைக் கொண்டு அடுத்த மாதம் பெங்களூருவில் மெகா நாய் இன கண்காட்சி நடத்தத் திட்டமிட்டுள்ளாராம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.