பெங்களூரு, பிரியாணி குறித்து தவறான தகவலை கூறியதற்காக, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவிடம், ‘சாட் ஜிபிடி’ என்ற செயற்கை நுண்ணறிவு ‘ரோபோ’ மன்னிப்பு கோரியது.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான சத்யா நாதெல்லா, நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த இவர், அமெரிக்கா சென்று படித்து, பணியாற்றி இந்த உயர்ந்த பதவிக்கு வந்துள்ளார்.
கர்நாடகாவின் பெங்களூரில் நடந்த, எதிர்கால தொழில்நுட்பம் தொடர்பான மாநாட்டில் நேற்று முன்தினம் பங்கேற்று பேசினார்.
இந்தியாவில் வளர்ந்து வரும், ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து அவர் பேசுவதற்கு முன், ‘சாட் ஜிபிடி’ என்ற செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ரோபோவுடன் சற்று நேரம், ‘ஜாலி’யாக நாதெல்லா அரட்டை அடித்தார்.
அப்போது, எதிர்காலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கப் போகும் தென் மாநில, ‘டிபன்’ உணவு வகைகளை தெரிவிக்குமாறு நாதெல்லா கேட்டார்.
அதற்கு அந்த ரோபோ, இட்லி, தோசை, வடை போன்ற வழக்கமான டிபன் வகைகளுடன், பிரியாணியையும் சேர்த்துக் கொண்டது.
‘நான் ஹைதராபாதைச் சேர்ந்தவன். என்னிடமே பிரியாணியை டிபன் வகையில் சேர்த்து கூறுவதா?’ எனக் கேட்டதும், ரோபோ மன்னிப்பு கோரியது.
இட்லி – தோசை இடையே எது சிறந்தது என ஒரு நாடகம் எழுதுமாறும், அதை பிரிட்டன் நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் பாணியில் எழுதுமாறும் ரோபோவுக்கு நாதெல்லா உத்தரவிட்டார்.
பார்வையாளர்களை சற்று நேரம் சிரிக்க வைத்து இலகுவாக்கிய பின், தன் தொழில்நுட்ப உரையை நாதெல்லா தொடர்ந்தார்.
பிரதமருடன் சந்திப்பு!
‘மைக்ரோசாப்ட்’ தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின், ”டிஜிட்டல் மாற்றத்தால் வழிநடத்தப்படும் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியில் இந்திய அரசு தீவிர கவனம் செலுத்துவது ஊக்கமளிக்கிறது. ”இதில் இந்தியாவுக்கு உதவ என்றைக்கும் நாங்கள் தயாராக உள்ளோம்,” என்றார்.பிரதமர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘சத்யா நாதெல்லாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. நம் இளைஞர்கள், பூமியை மாற்றக்கூடிய ஆக்கப்பூர்வமான சிந்தனைகளால் நிரம்பியுள்ளனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்