கொல்கத்தா: வந்தே பாரத் ரயிலில் சிறப்பு எதுவும் இல்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஹவுரா ரயில் நிலையத்தில் கடந்த 30ம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டது. தாயார் காலமான நிலையிலும் இறுதி சடங்குக்கு பின், பிரதமர் மோடி காணொலி மூலம் இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது முதல்வர் மம்தா மேடை ஏறாமல் அமர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரயில் சேவை தொடங்கப்பட்ட 3வது நாளான (கடந்த 2ம் தேதி) வந்தே பாரத் மீது மர்மநபர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை. எனினும் ரயிலின் ஒரு பெட்டியின் கண்ணாடி கதவு சேதமடைந்துள்ளது.
கல்வீச்சு சம்பவம் நடந்தபோதும் ரயில் வழியில் எங்கும் நிறுத்தப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி; மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்படவில்லை. மாநிலத்தை அவதூறு செய்த ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வந்தே பாரத் ரயிலில் சிறப்பு எதுவும் இல்லை; இது ஒரு புதிய என்ஜின் பொருத்தி புதுப்பிக்கப்பட்ட பழைய ரயில் எனவும் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.