இந்திய சினிமா உலகின் தவிர்க்க முடியாத கலை இயக்குநர்களில் ஒருவரான சுனில் பாபு காலமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு வயது 50. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து திரைத் துறையிலும் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார் சுனில் பாபு.
பிரபல கலை இயக்குநரான சாபு சிரிலிடம் உதவி புரொடக்ஷன் டிசைனராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் சுனில் பாபு. அதன் பிறகு மைசூரு கலை கல்லூரியில் தனது படிப்பை முடித்த சுனில் மலையாளத்தில் பல படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.
அதன்படி, அனந்த பத்ரம், பெங்களூர் டேஸ், காயம்குளம் கொச்சுன்னி, பழசிராஜா, உருமி, சோட்டா மும்பை, பிரேமம், நோட்புக், ஆமி போன்ற படங்களுக்கு கலை இயக்கம் செய்திருக்கிறார் சுனில், அனந்த பத்ரம் படத்துக்காக சிறந்த கலை இயக்குநர் என்ற கேரள மாநில விருதையும் சுனில் பெற்றிருக்கிறார்.
View this post on Instagram
இதுபோக இந்தியில் எம்.எஸ்.தோனி, கஜினி, லக்ஷயா, ஸ்பெஷல் 26 உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். தற்போது பொங்கல் பண்டியை முன்னிட்டு வெளியாக இருக்கும் விஜய்யின் வாரிசு படத்துக்கும் சுனில் பாபுதான் கலை இயக்குநராக வேலை பார்த்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காலில் வீக்கம் இருந்ததற்காக கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சுனில் பாபு.
தற்போது சுனில் பாபுவின் மறைவு செய்தி வெளியானதை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுனில் பாபுவின் போட்டோவை பகிர்ந்து இதயம் கணக்கிறது எனக் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.