புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமியை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டதாக பன்னாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் 70 வயது பெண் பயணி மீது சக ஆண் பயணி ஓருவர் குடிபோதையில் சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது.
குற்றம்சாட்டப்பட்ட நபர், தன் மனைவி, குழந்தைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் அசிங்கம், அதனால் போலீசில் புகார் தெரிவிக்க வேண்டாம் என பெண் பயணியிடம் கெஞ்சி, அழுதார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அந்த நபரும் சமரசமாக சென்று விட்டதாக டிஜிசிஏவிடம் புகார் தெரிவிக்கவில்லை என்று கூறியிருந்தது. ஆனால், குற்றம்சாட்டப்பட்ட நபருடன் சமாதானமாக போகும்படி விமான நிறுவன ஊழியர்கள் தன்னை வற்புறுத்தியதாக பெண் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட நபர் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட வெல்ஸ் பார்கோ என்ற பன்னாட்டு நிதி சேவை நிறுவனத்தின் இந்திய பிரிவில் பணியாற்றிய சங்கர் மிஸ்ரா என்பது தெரிய வந்தது. பணியில் இருந்து அவரை நீக்கி விட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
விமானத்தில் யாரேனும் முறைகேடாக நடந்து கொண்டால் அதுபற்றி உடனே தெரிவிக்க வேண்டும். விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் பயணிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்க தவறும் விமான நிறுவன ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.