ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு காலை 6:45 மணி முதல் பிற்பகல் 1 மணி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
பவுர்ணமியை முன்னிட்டு சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று மார்கழி திருவாதிரை என்பதால் சுவாமிக்கு திருவாதிரை களி படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சித்தர்களுக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கூரைநாடு பகுதியை சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி துரை(61) என்பவர் தனது நண்பர்களுடன் சதுரகிரி கோயிலுக்கு வந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாப்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.