புதுடில்லி:’எனக்கு 1.5 கோடி தொண்டர்களின் ஆதரவு உள்ளது. பொதுச் செயலர் தேர்தல் இன்று நடந்தாலும், நான் தான் வெற்றி பெறுவேன்’ என, அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான வழக்கில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கின் விசாரணை வரும், 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் 23-ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் எந்த முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்,- இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக முன்னாள் முதல்வர் பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது’ என, உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.
இதை எதிர்த்து பன்னீர்செல்வம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக நடந்த விசாரணையின் தொடர்ச்சியாக நேற்று மூன்றாவது நாளாக வாதங்கள் தொடர்ந்தன. அப்போது பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதிட்டதாவது:
என் கட்சிக்காரர் பன்னீர்செல்வத்துக்கு, 1.5 கோடி தொண்டர்களின் ஆதரவு உள்ளது. இன்று தேர்தல் நடந்தாலும், அவர் தான் பொதுச் செயலராக தேர்வு செய்யப்படுவார். கட்சி தொண்டர்களிடம் தனக்குள்ள பலத்தை நிரூபிக்க பன்னீர்செல்வம் தயாராக உள்ளார்.
பொதுக்குழு கூட்டம் செல்லாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், டிவிஷன் பெஞ்ச் தலையிட்டிருக்கக் கூடாது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். வேறு யாருக்கும் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அதிகாரம் இல்லை.
ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கட்சி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டனர். கட்சியின் பொதுச் செயலரை அடிமட்ட தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற கட்சியின் விதியை மாற்ற முடியாது.
ஆனால் பழனிசாமி, தன் சுயநலத்துக்காக இந்த விதிகளை மாற்றிஉள்ளார்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வரும் 10ல், பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்படும் என தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்