மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள வஹாட் என்ற இடத்தில் வசிப்பவர் நித்தின். இவரின் மனைவி கர்ப்பமாக இருந்தார். அவரை பரிசோதனைக்காக புனே சூர்யா மருத்துவமனையில் சேர்த்தபோது சோதித்த டாக்டர்கள், அவர் வயிற்றில் இரண்டு கர்ப்பப்பை இருந்ததை கண்டுபிடித்தனர். இதில் ஒரு கர்ப்பபை மிகவும் சிறியதாக இருந்தது. சிறிய கர்ப்பப்பையில் தான் குழந்தை வளர்ந்தது. இதனால் குழந்தை முழுமையாக வளர முடியாத நிலை ஏற்பட்டது.
வழக்கமாக குழந்தை 37 முதல் 40 வாரம் வளர்ச்சியடைந்த பிறகுதான் பிறக்கும். அவ்வாறு பிறக்கும் குழந்தை சராசரியாக 2.5 கிலோ எடை இருக்கும். ஆனால் நித்தின் மனைவிக்கு 24 வாரத்தில் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 400 கிராம்தான். இந்த எடையில் பிறக்கும் குழந்தைகள் உயிர் பிழைப்பது மிகவும் அபூர்வம். ஆனால் அந்தக் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து முழு வளர்ச்சியடையும் வரை டாக்டர்கள் வளர்த்தனர்.
குழந்தை 94 நாள்கள், தாயின் கர்ப்பப்பையில் இருப்பது போன்ற சீதோஷ்ண நிலையில் வளர்க்கப்பட்டது. சிகிச்சை முடிந்து குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது அதன் எடை 2.130 கிலோ இருந்தது. குழந்தைக்கு சிவன்யா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து குழந்தைக்கு சிகிச்சையளித்த சூர்யா மருத்துவமனை டாக்டர் சச்சின் ஷா கூறுகையில், ’கடந்த 10 ஆண்டில் 400 அபூர்வமான குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து அனுப்பி இருக்கிறோம். ஆனால் குழந்தை சிவன்யா இன்னும் ஆச்சர்யம். இந்தியாவிலேயே மிகவும் எடை குறைந்த குழந்தையாகவே இதை பார்க்கிறோம். இதற்கு முன்பு இந்த எடையில் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் இல்லை. மே 21-ம் தேதி பிறந்த குழந்தை ஆகஸ்ட் 23-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது’’ என்று தெரிவித்தார். இதற்கு முன்பு உதய்பூரில் கடந்த 2018-ம் ஆண்டு இதே எடையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.