Doctor Vikatan: உணவுக்கும் ரத்த அழுத்தத்துக்கும் தொடர்பு உண்டா? சில வகை உணவுகள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும், சில உணவுகள் குறைக்கும் என்றும் சொல்லப்படுவது உண்மையா? ஹை பிபி, லோ பிபி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்
உணவுக்கும் ரத்த அழுத்தத்துக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு. சோடியம் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடும்போது நமக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கும் ரிஸ்க்கும் கூடும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பக்கவாதமும், இதயம் தொடர்பான பாதிப்புகளும் அதிகம் வர வாய்ப்புகள் உண்டு. எனவே ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது ரொம்பவே முக்கியம்.
குடும்பப் பின்னணியில் அப்பாவோ, அம்மாவோ ரத்த அழுத்தத்துக்காக பல வருடங்களாக மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கலாம். சிலருக்கு குடும்பப் பின்னணியில் கொலஸ்ட்ரால் பாதிப்பு இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் மற்றம் கொலஸ்ட்ராலின் விளைவாக பக்கவாதம் தாக்கும் அபாயம் உண்டு,
அதிக உப்புள்ள உணவுகளைச் சாப்பிடுவது ரத்த அழுத்த ஆபத்தை அதிகரிக்கும். ஒருநாளைக்கு ஒருவர் 5 கிராம் அளவு உப்புதான் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. 5 கிராம் உப்பில் 2400 மில்லிகிராம் சோடியம் இருக்கும். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொருவரும் 10 முதல் 12 கிராம் அளவு உப்பு எடுத்துக்கொள்கிறோம்.
காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் இயற்கையிலேயே சோடியம் இருக்கும். தவிர சமைக்கும்போதும் உப்பு சேர்க்கிறோம். கூல்டிரிங்க்ஸ், சாஸ், கெட்ச்சப், புராசெஸ்டு உணவுகள் என எல்லாவற்றிலும் அதிக சோடியம் சேர்க்கப்படுகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே இத்தகைய உணவுகளுக்குப் பழகுவதால் வளரும்போது உயர் ரத்த அழுத்த பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. உடல் எடையும் கூடுகிறது.
எந்தப் பிரச்னையும் இல்லாத நபர்கள் சமைக்கும்போது உப்பின் அளவைக் குறைக்க வேண்டியதில்லை. ஆனால் சாப்பிடும்போது பக்கத்தில் உப்பு வைத்துக் கொள்வதைத் தவிருங்கள். உதாரணத்துக்கு தயிர்சாதத்துக்கு உப்பு, பழங்கள், சாலட் சாப்பிடும்போது உப்பு தூவுவது போன்றவற்றைத் தவிருங்கள்.
பாக்கெட் உணவுகளைச் சாப்பிடும்போது அந்த பாக்கெட்டில் சோடியம் அளவைப் பாருங்கள். அது அளவுக்கு அதிகம் என்று தெரியும்போது அத்தகைய உணவுகளைத் தவிருங்கள்.
சில வகை உணவுகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உதாரணத்துக்கு பொட்டாசியம் உள்ள உணவுகள். பிபியைக் குறைக்க மருத்துவர்கள் பொட்டாசியம் லிக்விட் கொடுப்பதைப் பார்க்கலாம். உருளைக்கிழங்கு, கீரை, கொத்தமல்லி போன்றவற்றிலும், ஆப்பிள் தவிர்த்த அனைத்துப் பழங்கள், வெள்ளரிக்காய் தவிர்த்த அனைத்து காய்கறிகளிலும் பொட்டாசியம் இருக்கிறது. அதற்கேற்ப காய்கறிகள், பழங்களைச் சாப்பிடலாம்.
ரெடிமேடு குளிர்பானங்கள், ரெடிமேடு குளிர்பான மிக்ஸ், இன்ஸ்டன்ட் டிரிங்க்ஸ், அப்பளம், சிப்ஸ், வடாம், ஊறுகாய் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
லோ பிபி உள்ளவர்கள் அதிக உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்துக்கொள்கிறார்கள். அது மிகவும் தவறு. லோ பிபி உள்ளவர்கள், இளநீரில் இயற்கையான எலக்ட்ரோலைட் உள்ளதால் அதைக் குடிக்கலாம். நீர்மோர் மிக நல்லது. ஸ்மூத்தி சாப்பிடலாம். உடல் வறண்டுபோகாதபடி நிறைய திரவ உணவுகளைச் சாப்பிடுவது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.