புதுடெல்லி: உயர்நீதிமன்ற மதுரை கிளை தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் சுவாதிக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த உச்ச நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் தன்னுடன் படித்த நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதி என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 8ல் தீர்ப்பளித்தது.
இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை விசாரித்து வருகிறது. இந்நிலையில் கோகுல் ராஜ் கொலை வழக்கில் சுவாதி பிறழ் சாட்சியம் கூறியதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து பதிவு செய்தது. இதை எதிர்த்து சுவாதி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘‘இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தொடர்ந்த அவமதிப்பு வழக்கை சுவாதி சந்தித்து தான் ஆக வேண்டும். அதில் எந்த நிவாரணமும் வழங்க முடியாது’’ என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
திருச்செங்கோடு கோயிலில் நீதிபதிகள் நேரில் ஆய்வு: சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சுவாதியின் கணவர் ஆஜரானார். அப்போது, அவரது தரப்பு வழக்கறிஞர், சுவாதி கர்ப்பமாக இருப்பதால் ஆஜராக முடியாத நிலையில் உள்ளார் என்றார். இதையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பொய் சாட்சியம் கூறியும், பிறழ் சாட்சியமாக மாறியும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியது உறுதியாகியுள்ளது.
எனவே, சுவாதி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்து அதற்கான மெமோவை அவரது கணவரிடம் வழங்க உத்தரவிட்டனர். கோகுல்ராஜின் தாயார், தமிழக அரசு, சிபிசிஐடி தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் யுவராஜ் உள்ளிட்ட மேல்முறையீடுதாரர்கள் தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை ஜனவரி இறுதி வாரத்திற்கு தள்ளிவைத்தனர். மேலும், கோகுல்ராஜ் இருந்ததாக கடைசியாக பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் அமைப்பை புரிந்து கொள்ளவும், உள்ளே செல்லும் வழி, வெளியே வரும் வழி ஆகியவை குறித்து புரிந்து கொள்வதற்காக ஜனவரி 22ல் நேரடியாக சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.