தமிழ்நாடு என்று அழைத்தால் என்ன கிடைக்கிறது? சு.வெங்கடேசன் எம்.பி., பேச்சு!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு தன்னார்வலர்களைப் பாராட்டிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” என பேசினார்.

ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அரசு நிகழ்வுகள், பல்கலைக்கழக நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவி., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டப்படும் நிலையில், தமிழ்நாடு குறித்தான அவரது பேசுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன. அத்துடன் ட்விட்டரில் ‘தமிழ்நாடு’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற மூட்டா மாநாட்டு கருத்தரங்கில் கலந்து கொண்ட சு.வெங்கடேசன் எம்.பி., “தமிழ்நாடு” என்று அழைப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது? என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட பொழுது அறிஞர் அண்ணா சொன்ன பதிலை மேற்கோள் காட்டி பேசினார்.

தமிழ்நாடு என்று அழைப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “மக்களவையை லோக்சபா என்று அழைப்பதன் மூலம், மாநிலங்களவையை ராஜ்யசபா என்று அழைப்பதன் மூலம், குடியரசுத் தலைவரை ராஷ்ட்ரபதி என்று அழைப்பதன் மூலம் உங்களுக்கு என்ன கிடைத்ததோ அதுதான் தமிழ்நாடு என அழைப்பதன் மூலம் எங்களுக்கு கிடைக்கிறது” என பேரறிஞர் அண்ணா சொன்னதை மேற்கோள் காட்டி மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் பேசினார்.

முன்னதாக, “தியாகி சங்கரலிங்கனார், அறிஞர் அண்ணா, தோழர் பூபேஷ் குப்தா என்று எங்களின் தலைவர்களால் கொன்று வீசப்பட்ட கருத்தை இன்று மீண்டும் ஆளுநர் ரவி தூக்கிக்கொண்டு வருகிறார். பழைய பிணம் என்றாலும் புதிய வண்டுகள் வெளிவரத்தானே செய்யும்.” என சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.